பார்த்தவர்களை அழ வைக்கும் பரிதாபத்துக்குரிய பிள்ளை.
பார்ப்பதற்கு துரு துரு என்று ஓடும் இந்த 6 வயது அழகு ராஜாவை நேரில் பார்த்ததும் ஆச்சரியம். டவுசரும் சட்டையும் அணிந்து இருந்தான். அவனது கைகளை காணவில்லை.
சட்டையை கழட்டியதும் துக்கமும், துயரமும் தொண்டையை அடைத்துக்கொள்ள நம்மை அறியாமலேயே கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
வலது கை முற்றிலுமாக இல்லை. இடது கை சுமார் 4 அங்குலம் மட்டும் சதை துண்டமாக தொங்கி கொண்டிருக்கிறது.
வலது காலும் கோணல் மாணலாக மூன்றாக வளைந்து...கடவுளே என்ன இது? இப்படி ஒரு படைப்பா? என்று படைத்தவனை நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் கிராமத்தில் ஒரு சின்னஞ்சிறிய கீற்று குடிசை தான் இந்த பரிதாப சிறுவனின் உலகம்.
தாய் பாண்டியம்மாள். வாழ்க்கையில் வசந்தத்தை அனுபவிக்க வேண்டிய காலத்தில் வறுத்தெடுக்கும் வெயிலிலும், வாட்டும் பனியிலும் நாற்று நட்டு, களை பறித்து, கல், மண் சுமந்து குடும்பத்தை தாங்கி நிற்கும் 36 வயதே நிரம்பிய சுமை தாங்கி.
பாண்டியம்மாள் ஏழை குடும்பத்தில் பிறந்து வறுமையோடு போராடியவர். திருமணத்திற்கு பிறகாவது திருப்பு முனை வராதா என்று ஏங்கியவர்!
ஆனால் அதன்பிறகு தான் சோகமே அவரது வாழ்க்கை என்று முடிவானது.
கணவர் மணியோடு பாண்டியம்மாள் நடத்திய இல்லற வாழ்வின் அடையாளமாக முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு அழகு மீனா என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.
அடுத்து பிறந்தவர் தான் இந்த அழகுராஜா. ஆண் குழந்தை என்று மகிழ்ச்சியில் திளைத்தவர்களுக்கு அடுத்த கணமே பேரதிர்ச்சி காத்திருந்தது. உங்கள் பிள்ளைக்கு இரு கைகளும் இல்லை, காலும் ஊனமாக இருக்கிறது என்று டாக்டர் கூறிய வார்த்தையை கேட்டதும் நெருப்பில் தூக்கி போட்டது போல் இருந்தது. வாழ்க்கையின் மொத்த சந்தோசமும் அன்றே எரிந்து சாம்பலாகி போனது.
பிறந்த குழந்தை வாழ்க்கை முழுவதும் முடமாகத்தான் இருக்கப்போகிறது என்பதை உணர்ந்த மணி மனைவியை பிரிந்து சென்றுவிட்டார்.
இப்போது அந்த இரண்டு குழந்தைகளுக்காகவே வாழும் அந்த ஏழைத்தாய் உடைந்து நொறுங்கி அழுவதெல்லாம் ‘என் அழகுராஜாவை எப்படி வளர்ப்பேன்...? என் காலத்துக்கு பிறகு அவனை கவனிப்பது யார்?’ என்று தான்.
அழகு மீனா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3–ம் வகுப்பு படிக்கிறாள். அழகுராஜா இந்த வருடம் 1–ம் வகுப்பு.
காலையில் விவசாய வேலைக்கு புறப்படுவதற்கு முன்பு மகனை தூக்கி சென்று பள்ளியில் விடுகிறார். மாலையில் தூக்கி வருகிறார்.
வீட்டில் தாய் உணவு ஊட்டுகிறார். பகலில் பள்ளியில் அழகு மீனா தன் தம்பிக்கு தாய்போல் அருகில் அமர்ந்து சோறு ஊட்டுகிறார். அதை பார்க்கும் ஒவ்வொருவரது இதயமும் இரங்கும்.
இயற்கை உபாதையை கழிப்பது முதல் கைகள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் தாய் பாண்டியம்மாள் தான் செய்து வருகிறார்.
எதிர்காலத்தை பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் பரிதாபமாய் பார்த்த அவனிடம் தம்பி, உன் பெயர் என்னப்பா? என்றதும் ‘அழகு ராஜா’ என்று அழகாக சொல்கிறான். என்ன படிக்கிறே என்றதும் ‘ஒண்ணாம் வகுப்பு’ என்று படு சுட்டியாக பதில் கூறினான்.
இப்போது தான் இடது காலால் எழுத பழகி கொண்டிருக்கிறான். ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...?’– என்று குறைகள் ஆயிரம் இருந்தாலும் என் பிள்ளை என் பிள்ளை தான் என்று மகனை அணைத்து மகிழ்கிறார் தாய் பாண்டியம்மாள்.
மகனின் வருங்கால வாழ்க்கைக்கு ஏதாவது வழி பிறக்குமா? என்ற ஏக்கத்தோடு இருக்கும் பாண்டியம்மாளுக்கு உதவிக்கரங்கள் நீண்டால் கைகள் இல்லாத அழகு ராஜாவுக்கு கைகொடுத்தது போல் இருக்கும் (தொடர்புக்கு: 7402508264).
நன்றி: மாலைமலர் 25/03/16
No comments:
Post a Comment