அழகுத் தமிழ் பேசி பல தமிழர்களுக்குத் தமிழ் உணர்வு ஊட்டி வந்த அமெரிக்க பேராசிரியர் பெர்னாட் பெட் (Bernard Bate) 11 மார்ச் அன்று அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 54. சிங்கப்பூரில் யேல்- என்யுஎஸ் கல்லூரியில் மானுடவியல் துறைப் பிரிவை அமைத்து, அங்கு பணியாற்றி வந்த பெர்னாட் பெட் மாரடைப்பினால் உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. ஓராண்டு ஆய்வு விடுப்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமெரிக்காவின் ஸ்டாம்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வை மேற்கொண்டிருந்தார் அவர்.
“சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த பல பணிகளைச் செய்ய வேண்டும் என்ற பேரார்வம் கொண்டிருந்த அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது,” எனக் குறிப்பிட்டார் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் சித்ரா சங்கரன். “திரும்பி வந்ததும் தமிழ்ச் சமூகத்துடன் ஒன்றுகலந்து செயல்பட வேண்டும், பணிகள் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறிச் சென்றது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது என்ற முனைவர் சித்ரா சங்கரன், சிங்கப்பூர் தமிழ் நூல்களின் மின்மரபுடைமை அறிமுக நிகழ்ச்சியில் மெக்பெத்தாக நடித்து அவர் எல்லாருடைய மனதையும் கவர்ந்ததை நினைவு கூர்ந்தார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் துவக்கிய பேட், மிச்சிகன், கொலம்பியா பல்கலைக் கழகங்களில் பத்தாண்டு காலம் பணியாற்றி உள்ளார்.
தமிழ் மேடைப்பேச்சு, திராவிடக் கலாசார அரசியல் போன்றவை குறித்த ஆய்வுக்கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். ‘Tamil Oratory and the Dravidian Aesthetic: Democratic Practice in South India’ என்ற அவரது நூல் முக்கியமான ஒன்று. தமிழை உலகளாவிய ரீதியில் சமூகவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர். பேராசிரியர் பெர்னாட் பெட் எனக் குறிப்பிட்டார், தேசிய பல்கலைக்கழக, தெற்காசிய கல்வித் துறையின் துணைப் பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு. “தமிழ்ச் சமூகம் தொடர்பாக மானுடவியல், சமூகவியல் துறைகளில் ஆய்வு செய்தவர்களில் முக்கியமானவர். அவர் தமிழ் கற்கை நெறிகளை பல்வேறு மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். நன்றி: சிங்கப்பூர் தமிழ் முரசு
தமிழ் மொழியை வளர்த்த அமெரிக்க பேராசிரியர் பெர்னாட் பெட்டுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
பெர்னாட் பெட்டின் அழகு தமிழ் பேச்சு
No comments:
Post a Comment