Wednesday 24 February 2016

அரசுப் பள்ளியில் தமிழ்வழிப் படித்தால் அய்.ஏ.ஸ். ஆக தடையில்லை!

நீங்கள் எடுத்துக்கொண்ட இலட்சியத்தில் மனஉறுதி கொண்டவராக இருந்தால் உறுதியாய் அய்..எஸ். தேர்வில் வெற்றி பெறலாம்.
நீங்கள் அஞ்சல்வழியில் படித்ததோ, அரசுப்பள்ளிகளில் படித்ததோ, தமிழ்வழியில் படித்ததோ வெற்றிக்குத் தடையாக இருக்காது.

நீங்கள் கிராமப்புறத்தில் இருந்து வந்திருக்கலாம். தேவையான பணபலம் இல்லாமல் இருக்கலாம். வழிகாட்டுவதற்கு குடும்பத்தில் நிறையப் படித்தவர்கள் இல்லாமல் இருக்கலாம். இவையெல்லாம் சாதனைக்குத் தடையல்ல. இதற்கு சங்கர்கணேஷ் என்ற கிராமத்து மாணவரே சான்று.

சங்கர்கணேஷ் சாதாரண விவசாயக் குடும்பத்தில்கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படித்தவர். 10ஆம் வகுப்பு வரைதான் பள்ளியில் படித்தார். பள்ளிப் படிப்பினைத் தொடர பொருளாதார வசதியில்லை. ஏதேனும் ஒரு வேலை செய்து கொண்டு பின் படிக்கலாம் என்ற சிந்தனையில் தொழிற்கல்வி 3 ஆண்டுகள் படிக்கிறார். அதனை வைத்து வேலை தேடுகிறார். வேலை கிடைக்கிறதுவேலை பார்த்துக் கொண்டே தொலைநிலைக்கல்வியில் இளநிலை பொருளியல் படிக்கின்றார்.

பொருளியல் பட்டம் பெற்று அய்..எஸ். தேர்வுக்கான அடிப்படைக் கல்வித் தகுதியினை பெறுகிறார்.

பெரும்பாலும் குடிமைப்பணித் தேர்வுகளில் விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்யும்போது ஏற்கனவே தேர்வினை எழுதி வெற்றி பெற்றவர்களிடமோ அல்லது நேர்முகத்-தேர்வுவரை சென்றவர்களிடமோ ஆலோசனைகள் பெறுவது வழக்கம்.

இவ்வாறு ஆலோசனைகள் பெறும்போது பெரும்பாலான வெற்றியாளர்கள் வரலாறு, புவியியல், பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல், தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களாக இருந்தால், தமிழ் இலக்கியம் போன்ற பாடங்களையே விருப்பப்பாடங்களாக எடுத்திட பரிந்துரைப்பது உண்டு. போட்டித் தேர்வு எழுதப் போகிறவர்களும் மேலே கூறியவற்றையே விருப்பப் பாடங்களாகத் தேர்வு செய்வதும் உண்டு. ஆனால் சங்கர் கணேஷ் பொருளியலை விருப்பப்பாடமாக எடுத்துக் கொண்டார். அவராகவே குறிப்புகளை எடுக்கவும், படிக்கவும் தொடங்கிவிட்டார்.

ஒரு சிறிய வழிகாட்டுதலுக்காக தொடக்க காலத்தில் பொருளியல் பாடத்தினை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்து அப்பாடத்தில் அதிக மதிப்பெண்களும் பெற்று வெற்றி பெற்ற எஸ்.சங்கரவடிவேலு என்ப-வரைப் பார்க்கச் செல்கிறார். அவர் இந்திய வருவாய்ப்பணியில் இணை ஆணையராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

அவரும் இவரது முயற்சிக்குத் தடை சொல்லாமல் சில எதார்த்த சூழல்களையும், வழிகாட்டுதல்களையும் கூறி உற்சாகப் படுத்துகிறார். தனது முயற்சி கடுமையானதாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை சங்கர்கணேஷ் உணர்கிறார். அதற்குத்தக்கவாறு திட்டமிட்டு தேர்வுக்குத் தயாராகிறார்.

பெரும் முயற்சிக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு நேர்முகத்தேர்வுக்குச் செல்கிறார். நம்பிக்கை-யோடு எதிர்கொள்கிறார். இருந்தும் வெற்றி வாய்ப்பு நழுவுகிறது.

பொதுவாக தமிழ்நாட்டில் குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கும் தயாராவது வழக்கமான ஒன்று.
ஆனால், சங்கர் கணேஷ் குடிமைப்பணித் தேர்வுகளைத் தவிர வேறு தேர்வுகளை எழுதுவது மட்டுமல்ல, விண்ணப்பிப்பது கூட இல்லை. அத்தகைய முடிவோடும், உறுதியோடும் இருந்தார். காரணம், தன் இலக்கு மாறிவிடக் கூடாது என்பதற்காக.

நேர்முகத்தேர்வுக்குச் சென்று வெற்றி வாய்ப்பினை தவறவிட்டும் அவர் சோர்வடையவில்லை.

மீண்டும் 2009 ஆம் ஆண்டு நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறார். குறைவான மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை  மறுபடியும் இழக்கிறார்.

2010ஆம் ஆண்டு மீண்டும் நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறார். இவருக்கு இது 5ஆவது முயற்சி. தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிடுகிறது. ஆர்வத்-தோடும், அச்சத்தோடும் பட்டியலைப் பார்த்த அவருக்கு அளிவிலா மகிழ்ச்சி. ஆம். சங்கர்கணேஷ் தேர்வில் வென்றுவிட்டார்.

பொறியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள்கூட கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குத் தயாராகும் சூழலில், தொலை  தூரக்கல்வி வழியில் படித்த சங்கர்கணேஷ் அய்..எஸ் தேர்வை மட்டுமே எழுதுவேன் என்றுகூறி வெற்றி முத்திரையும் பதித்த இலட்சிய நோக்கு பாராட்டுக்குரியது.

எனவே, கிராமப்புறமா? தமிழ் வழியா? என்பது முக்கியமல்ல, எங்கு பயின்று வந்தாலும் உறுதியான உழைப்புடன் முயன்றால் இந்த உயர்வை எட்டலாம். கிராமப்புற மாணவர்களே இவரைப் பின்பற்றுங்கள்!


விருப்பப் பாடம் தேர்வு செய்கையில் உங்களுக்கு அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதைத் தேர்வு செய்யுங்கள். தோல்வியைக் கண்டு துவளாமல், மீண்டும் மீண்டும் முயலுங்கள். வெற்றி உறுதி!

நன்றி: உண்மை இதழ்

No comments:

Post a Comment