Saturday 6 February 2016

கலப்பு மண வாழ்க்கையில் பரிபூரண மகிழ்ச்சி சாத்தியம்தான்

இனம் வேறாக இருந்தால் என்ன, மனம் ஒன்றானால் போதும். நிறம் அல்ல, வாழ்க்கையில் அறமே பிரதானம். வாழப் பல வழிகள் இருப்பதால் மொழியும் ஒரு பிரச்சினை இல்லை. காதலுக்குக் கண் மட்டுமல்ல, இனம், சமயம், மொழி, நிறம் என எதுவுமே இல்லை என்பதற்கு கலப்பு மணம் புரிந்து மகிழ்ச்சி யுடன் வாழும் தம்பதியரே சிறந்த சான்று. தீபாவளி அன்று புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசி பெற்று பண்டிகையைக் கொண்டாடி மகிழும் தம்பதியினர், குடும்பமாக இரவுணவு சாப்பிட்டு தம் அன்புக் குரியவர்களுக்குஹொங் பாவ்அளித்துச் சீனப் புத்தாண்டையும் வரவேற்கின்றனர். சீனர்களும் இந்தியர்களும் திருமணம் செய்துகொண்டு இரு கலாசார, பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வருவது பல்லின நாடாக முன்னேறியிருக்கும் நமது சிங்கப்பூரின் தனித்துவம்.
அலுவலகப் பணியாக சீனாவிற்குப் பயணம் செய்த திரு தினேஷ் சுரேஷ், அங்குள்ளோருடன் உரை யாட அடிப்படை சீன மொழியைக் கற்றார். தம் வாழ்க்கை முழுதும் அது பயனளிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் இயந்திரப் பொறியியல் பயின்றபோது வகுப்புத்தோழியாக இருந்த யோங் மெய் இப்போது அவரது வாழ்க்கைத் துணை. கல்லூரிக் காலத்தில் காதலால் இணைந்த இருவரும் பட்டக் கல்விக்குப் பின் திருமணம் செய்துகொண்டனர். யோங் மெய்யின் குடும்பம் தொடக்கத்தில் தினேஷை அவர் திருமணம் செய்வதற்கு முழு சம்மதம் தெரிவிக்கத் தயங்கிய போதும் பின்பு திறந்த மனப்பான் மையுடன் அவர்களை ஏற்றுக் கொண்டனர்.
கலப்பு மண வாழ்க்கையிலும் பரிபூரண மகிழ்ச்சி சாத்தியம்தான் என்பதை மெய்ப்பித்துக் காட்டிவரும் தினேஷ் சுரேஷ் - யோங் மெய் தம்பதி (நின்றிருப்போரில் நடுவில்) தம்முடைய குடும்பத்தாருடன் சீனப் புத்தாண்டை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.
நன்றி:  செய்தி-தமிழ் முரசு சிங்கப்பூர் 07/02/16
சிந்தனை:
மணம் விரும்பி காதலித்து திருமணம் செய்ய விரும்பும் தகுதியானவர்களை கூட இனம், சாதி, மதம் என்று கூறி ஏற்க மறுக்கும் பெற்றோர்கள் மற்றும் அதனால் கவுரவக் கொலைகள் செய்யும், செய்ய துணியும் பெற்றோர்கள் இது போன்ற கலப்பு மணம் புரிந்து  வாழ்க்கையில் பரிபூரண மகிழ்ச்சியாக வாழ்பவர்களின் செய்திகளை படித்து உலகறிந்து சிந்தித்தால் நம் பிள்ளைகள் மகிழ்ச்சியாகவும், நம் சமூகம் உலகம் போற்றும் வகையில் உயரும் என்பது நிச்சயம். 

No comments:

Post a Comment