Monday 1 May 2017

தமிழில் ஏன் பெயர் வைக்கவேண்டும்?

மிழர்கள் குழந்தைகளுக்குத் தமிழில் ஏன் பெயர் வைக்கவேண்டும்? இந்த கேள்வியே சற்று அபத்தமாக தோன்றலாம். ஆனால், இன்றைய சூழல், இந்தக் கேள்வி அவசியமானது என்பதை உணர்த்துகிறது. ஒரு பக்கம் பெயரில் என்ன இருக்கிறது என்று தோன்றினாலும், இன்னொரு பக்கம் பெயர் என்பது நம் அடையாளம் இல்லையா என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது.  
உலகின் தொன்மையான மொழி, உலகில் வாழும் செம்மொழி, சங்கம் வைத்து வளர்த்த மொழி, இயல்-இசை-நாடகம் என மூன்றிலும் வளர்ந்த மொழி என மிகப்பெரிய வரலாறு இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உண்டு.
இப்படி நாம் பெருமைப்பட வேண்டிய சூழலில், இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்று யோசித்துப்பார்த்தால் வேதனையாக தான் இருக்கிறது. தமிழின் சுவை அறியாமல் பிற மொழிகள் மீதான மோகம் இன்னமும் தமிழர்களை விடவில்லை. 
குறிப்பாக ஆங்கில மோகமும், வடமொழி மோகமும் இன்னமும் குறையவில்லை. "ஆங்கிலம் என்பது அறிவல்ல, அது மொழி மட்டும் தான்", "இந்தி தெரியாததால் நாம் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை" என்பதையும் திரும்பத் திரும்ப சொல்லும் அளவுக்கு இங்கே தாழ்வு மனப்பான்மை தமிழர்களிடையே நிலவுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.   
தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் வழக்கத்துக்கு வருவோம். குழந்தை பிறக்கப் போகும் சமயத்தில் அல்லது பிறந்தவுடன் உங்கள் நண்பர்களிடம் இருந்து "ஏதாவது நல்ல பெயரா சொல்லுங்களேன்?" என்ற கேள்வியை நீங்கள் கேட்டு இருக்கலாம். நீங்கள் உடனே அவசரப்பட்டு பெயர்களைச் சொல்லிவிட முடியாது. நீங்கள் அடுத்து எந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்கள் என்று கேட்கவேண்டும். ஏனென்றால், ஜோசியக்காரர், "இந்தெந்த  எழுத்தில் வைத்தால் குழந்தை டாப்பாக வரும்!" என்று சொல்லி இருப்பார். அதனால், அந்த எழுத்தில்தான் நீங்களும் சொல்லவேண்டும். சிலர், ,ஸ்ரீ,  என்று ஆரம்பிக்கிற மாதிரி தமிழ்ப் பெயர் சொல்லுங்க என்று கேட்டு இருக்கிறார்கள். இவை வடமொழி எழுத்துகள் என்ற புரிதல் கூட இங்கே பலருக்கு இருப்பது இல்லை. வடமொழி எழுத்துகளை பெயரில் வைப்பதும், வடமொழி பெயர்களை வைப்பதும் பரவலாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கு ஜோசியம், நியூமராலஜி, நேமலாஜி போன்ற நம்பிக்கைகள் துணைப் போகிறது. 
, ஸ்ரீ, மட்டுமல்ல, தமிழில் வடமொழி கலப்பு என்பது இன்னும் அதிகம். என் பெயர் "ராஜராஜன்" என்பது கூட தமிழ் கிடையாது. ராஜராஜ சோழன் தமிழ் மன்னன் என்பதால் அதைத் தமிழ்ப்பெயர் என்று நாம் எண்ணுவது இயல்பு. ஆனால், இதுவும் வடமொழி கலந்த பெயர் தான். ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி வர்மன். இப்படி, நம்மை அறியாமலே நாம் தமிழ்ப்பெயர்களை விட்டு விலகி இருக்கிறோம். 
கடந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள், தனித்தமிழ் இயக்கங்கள் மூலம் தமிழ்ப்பெயர்கள் மீதான கவனம் அதிகரித்தது என்று சொல்லலாம். இந்த இயக்கங்களின் தாக்கத்தால் வீடுகளில் தனித்தமிழ் பெயர்கள் அதிகரித்தது. நம் முந்தைய தலைமுறையில் பல குடும்பங்களில் தேடித்தேடி தமிழ்பெயர்களை வைத்து இருப்பதை பார்க்கலாம். அவர்களுக்கு அதில் ஒரு பெருமிதமும், கர்வமும் கூட இருக்கும். இந்தப் பெயர்களில் கூட இருவகைகளை பார்க்கலாம். மத அடையாளத்துடன் வைக்கப்படும் பெயர்கள், மத அடையாளம் இல்லாமல் வைக்கப்படும் பெயர்கள் என்று. மதங்களைக் கடந்தும் தமிழை நேசித்து தமிழ்ப் பெயர்களை வைத்தார்கள். இன்பன், இனியன், அறிவழகன், தமிழரசி, தமிழரசன், கயல்விழி, மலர்விழி, சுடர்க்கொடி என கவித்துவத்துடன் தனித்தமிழ் பெயர்கள் போன தலைமுறையில் அதிகமாக இருந்தது. 
பெயர்களில் தந்தை பெரியார் ஏற்படுத்திய தாக்கமும் குறிப்பிடத்தகுந்தது. அவர் தனித்தமிழ் என்ற பெயர்களைத் தாண்டி, பெயரில் இருக்கும் அரசியலைப் பார்த்தார். பெயருக்கு பின்னால் இருக்கும் சாதியை நீக்க வேண்டும் என்று போராடி வென்றவர் பெரியார். அவர், இந்த பெயர்களில் இருக்கும் புனிதங்களைக்கூட உடைத்தார். ரஸ்யா, மாஸ்க்கோ போன்ற பெயர்களை போன தலைமுறையினரிடம் நீங்கள் நிறைய பார்க்கலாம். இது தந்தை பெரியார் அவர்களின் தாக்கத்தினால் வைக்கப்பட்ட பெயர்கள். தனித்தமிழ் பெயர்கள் என்பதைத் தாண்டி, பெயரிலேயே புரட்சி வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். இந்த வரிசையில், இன்குலாப், இங்கர்சால், கார்கி, லெனின், மார்க்ஸ் போன்ற பெயர்களும், இந்திய சுதந்திர போராட்டத்தின் தாக்கத்தினால் காந்தி, நேரு போன்ற பெயர்களும் அதிகரித்தது. முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் பலருக்கு பென்னிகுக் என்ற பெயர் வைக்கப்பட்டதும் வரலாறு. தமிழர்கள் நன்றி உணர்வு மிகுந்தவர்கள் என்பதற்கும், மொழியை வெறும் அழகுணர்ச்சியுடன் மட்டும் பார்க்காமல் அறிவு சார்ந்தும் பார்ப்பவர்கள் என்பதற்கும் மேற்சொன்ன பெயர்கள் சில எடுத்துக்காட்டுகளே. 
வடமொழி மோகம் அதிகரித்துவிட்ட இந்த காலத்திலும் தனித்தமிழ் பெயர்களை வைக்கவேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடம் இருப்பது ஆரோக்கியமானது. இன்றும், நல்ல தனித்தமிழ் பெயர்களை வைக்கவேண்டும் என்று தேடுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆம்பல், யாழினி, கவின், வெண்பா, நவிரா, ஆதிரை, ஆதிரன் என இனிமையான பெயர்கள் வைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஆனால், எண்ணிக்கை அளவில் வடமொழி பெயர்கள்தான் இன்னமும் அதிகமாக இருக்கிறது.
தனித்தமிழ் பெயர்கள் தரும் இனிமைக்கு மாற்றே இல்லை. ஆனாலும், தமிழ்ப் பெயர்களைச் சொல்லுங்கள் என நண்பர்கள் கேட்கும் போது கொஞ்சம் தடுமாறத்தான் வேண்டி இருக்கிறது. பெயர் தமிழாகவும் இருக்கவேண்டும், அதேவேளையில் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தனித்தமிழ் பெயர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாராட்டப்படவேண்டியது, முக்கியமானது என்பது ஒருபுறமிருக்க, இதற்கு அடுத்த நிலை ஒன்று இருப்பதாக  தோன்றுகிறது. அது என்னவென்றால், நம்மிடையே அறிமுகமான, நாம் படித்த வரலாற்றில் இருந்தும், காப்பியங்களில் இருந்தும், இலக்கியங்களில் இருந்தும் எடுக்கப்படும் பெயர்கள். இவை தூயத்தமிழ்ப் பெயராக இல்லாவிட்டாலும். இந்த பெயர்களுக்கு ஒரு தனி வலிமை இருக்கிறது. 
சங்கமித்ரா என்ற பெயர் தூயத்தமிழ் இல்லை. ஆனால், அந்த பெயரில் ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இந்தப்பெயருக்கும் தமிழின் ஐம்பெரும் காப்பியமான மணிமேகலைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதேப்போல, இன்னொரு பெயர் சொல்லவேண்டுமென்றால், சித்தார்த்தன் என்ற பெயரைச் சொல்லலாம். சித்தார்த்தன் என்ற பெயர் வசீகரமானது. அந்தப் பெயர் ஆழமானதும்கூட. புத்தர் நம் நாட்டின் புரட்சிகர ஆன்மிகத் தலைவர். அவரின் இயற்பெயர் என்பதாலே இந்தப் பெயருக்கு ஒரு தனிச் சிறப்பு.
குழந்தைகளுக்கு அர்த்தமே தெரியாத "ஏதோ" ஒரு பெயருக்குப் பதில், தனித்தமிழில் பெயர் வைத்து தமிழின் இனிமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம். அல்லது,  இம்மாதிரி உலகப்பெயர்களை, காப்பியப் பெயர்களை, இந்தியப் பெயர்களை வைக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது? என்று ஒதுக்காமல் அதை நம் அடையாளமாகவும், அதில் இருக்கும் அரசியலையும் புரிந்துகொள்ளவேண்டும்.
ரா.ராஜராஜன்