Tuesday, 30 August 2016

நாராயண குருவின் சாதி மறுப்பு

அ. கருணானந்தன்
மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவர்
விவேகானந்தர் கல்லூரி, சென்னை


1916ஆம் ஆண்டு...
தென்னிந்திய சமூக அரசியல் வரலாற்றில்,


ஏன்? இந்திய வரலாற்றிலேயே, திருப்பு முனைகளை உருவாக்கிய ஆண்டு. உலகப்போர் மும்முரமாக நடை பெற்று வந்த காலமது... போரின் முடிவில், இந்தியர்களுக்கு அதிகமான அரசியல் வாய்ப்புகளை, சலுகைகளை ஆங்கில காலனி அரசு தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சனாதன சமூகக் கட்டமைப்பையே மாற்ற வேண்டுமென்ற குறிக்கோளுடன் இரண்டு வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்வுகள் நடந்தன.

சாதீயத்தை முற்றிலுமாக மறுத்து, சிறீநாரயண குரு என்ற புகழ்பெற்ற ஆன்மீகத்துறவி ஓர் அறிக்கையை வெளியிட்டது, அந்த ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் நடந்தது.
அதே ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் சென்னையில் நீதிக்கட்சி உருவானது. ஒரு மாதத்திற்குப் பின் டிசம்பர் 20ஆம் நாள் புகழ்பெற்ற "பிராமணரல்லாதார் அறிக்கை" (ழிஷீஸீ-ஙிக்ஷீணீலீனீவீஸீ விணீஸீவீயீமீstஷீ) வெளியிடப்பட்டது.

இவை இரண்டுமே சாதிக்கும், சாதி ஆதிக்கத்திற்கும் எதிராக எழுந்த வலிமை மிக்க போர்க்குரலாக அமைந்தன.

சமூக சமத்துவம் - சமூக நீதி - சமூக ஒற்றுமை ஆகிய வற்றின் மூலமாகத்தான் சமூக மாற்றம் - சமூக முன்னேற்றம் போன்றவற்றை அடைய முடியும் என்ற சித்தாந்தம் ஆன்மீகமாகவும், அரசியலாகவும் உருமாற்றம் பெற்ற ஆண்டு என 1916அய் நாம் கொண்டாட வேண்டியுள்ளது.

"பிராமணீய" ஆதிக்கம் என்பதுவே சாதி - வருண மரபை அங்கீகரிப்பதன் மூலமாக நடைபெற்று வந்துள்ளது. நாராயண குருவின் சமூகப்புரட்சியும், டி.எம்.நாயர் - பிட்டி தியாகராயர் - நடேச முதலியார் போன்றோரின் சமூக அரசியலும், சனாதன மரபு என்று பூசி மெழுகப்படும் வருண - சாதி முறையை மறுக்க வேண்டும், ஒழிக்க வேண் டும்; சமத்துவ அடிப்படையிலான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல் பட்டவை.

சாதிச் சீர்திருத்தம் பேசியோரை தேசியவாதிகளாகவும், சாதிமறுப்பு - சாதி  ஒழிப்பு பேசியோரை வட்டார வாதிகளாகவும் சிறுமைப்படுத்தி இருட்டடைப்பு செய்ய தன்னல சக்திகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூகநீதியிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ளவர்கள், நாராயண குரு, பெரியார் - அம்பேத்கர் போன்றவர்களது விசாலப் பார்வையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியாகத்தான் நாராயண குருவின் சாதி மறுப்பு அறிக்கையின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாராயண குரு எந்த மாதத்தில், எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது குறித்து எந்த அய்யமும் இருப்பதில்லை.

ஆவணி (சிங்கம்) மாதத்து சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. அதனால்தான் ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து வரும் சதயம் நட்சத்திரத்தன்று ‘குரு ஜெயந்தி'யைக் கொண்டாடு கின்றோம்.

ஆனால், எந்த ஆண்டில் பிறந்தார் என்பது பற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. கி.பி. 1854 என்போரும், 1855 என்போரும், 1856 என்போரும் உள்ளனர். இன்று நாராயண குரு அமைப்புகள் 1854 என்பதை ஏற்று அதனடிப்படையில் குரு சகாப்தத்தைக் கணக்கிடுகின்றனர், அதன்படி இந்த ஆண்டை (2016) குரு வருடம் 162 என்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
குரு வாழ்ந்திருந்த காலத்தில் குருவின் சீடர்களாலும், குருவைப் போற்றுபவர்களாலும் அவரது அறுபது ஆண்டு நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குருவின் ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் அதனை ஆடம்பரமாகக் கொண்டாட குரு அனுமதிக்காவிட்டாலும், பிற இடங்களில் அது மிகச் சிறப்பாகவே கொண்டாடப்பட்டது

அறுபதின் சிறப்பு

இந்திய மரபுகள் சிலவற்றில், பஞ்சாங்கங்களின்படி அறுபது ஆண்டுகள் என்பது வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு சுழற்சி நிறைவடையும் நிலையைக் குறிப்பதாகும். ஒரு யுகத்தின் நிறைவு. மனித வாழ்க்கையில் அது முதிர்ச்சி யையும், பக்குவப்படுதலையும், நிறைவையும் குறிக்கும். தமிழ் ‘காலண்டர்கள்' அறுபது ஆண்டுகளுக்கும் அறுபது பெயர்களைத் தருகின்றன. பிறகு மறுசுழற்சி. இந்த அறுபது ஆண்டுகளுக்கான பெயர்களின் தோற்றம் பற்றி நாரத ருக்கும், விஷ்ணுவிற்கும் ஏற்பட்ட உடலுறவால் தோன்றிய தான அருவருப்பான புராணங்கள் கற்பிக்கப்பட்டதுண்டு. அதனை தந்தை பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள் கடுமையாகக் கண்டணம் செய்து நிராகரித்தும் உள்ளனர். ஆனால் நாம் இங்கே அறுபது (சஷ்டியப்தம்) என்று குறிப் பிடுவது அனுபவத்தாலும், அறிவாலும், சிந்தனையாலும், செயலாலும் ஒரு மனிதன் முதிர்ச்சி என்னும் (உதிர்ச்சி அல்ல) பக்குவ நிறைவைப் பெறும் காலகட்டம். நிறைவான வாழ்க்கையைப் பெற்றுவிட்ட ஒருவரைப் போற்றுகின்ற பண்பாட்டு மரபுதான் அறுபது அகவை நிறைவு நிகழ்ச்சி யாகும்.

ஆதிசங்கரர் அறுபதில் பாதியைத் தான் கடந்தார். ஏசுநாதரும் அவ்வாறே, விவேகானந்தர் நாற்பதோடு நின்றுவிட்டார். புத்தர் எண்பதைக் கடந்தார். மகாவீரரைப் போன்று நாராயண குருவும் 70 ஆண்டுகள் கடந்தும் வாழ்ந்தார். அந்த நாராயண குருவின் அறுபது வயது நிறைவு விழா அவரது வாழ்நாளிலேயே கொண்டாடப்பட்ட ஆண்டு... 1916. அதாவது, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர். அவரது தத்துவங்களும், லட்சியங்களும் மிகத்தெளிவாக உலகிற்கு அவராலேயே அறிவிக்கப்பட்ட ஆண்டு அது. 1916 மே 28 அன்று வெளியிடப்பட்ட அவரது அறிக்கை ‘சாதி மறுப்பு அறிக்கை' எனப் புகழ் பெறுகிறது.

"யாம் சாதி-மத பேதங்களைத் துறந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும் சில குறிப்பிட்ட பிரிவினர் நம்மை அவர்களுடைய இனத்தை (சாதியை)ச் சேர்ந்த வரராக எண்ணியும் பணியாற்றியும் வருவதாகவும், அதன் விளைவாக பலருக்கும் எம்மைப் பற்றி உண்மைக்கு புறம் பான எண்ணங்கள் உருவாகி உள்ளதாகவும் அறிகிறோம்."

"யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை. குறிப்பாக  நம்முடைய சீடர் குழுவிற்கும் மேற்படியுள்ளவர்களை (சாதி - மத உணர்வில்லாதவர்களை) மட்டுமே, எம்முடைய வாரிசாக வரத்தக்க வண்ணம் ஆலுவா ஆசிரமத்தில் சேர்த்துள்ளோம் என்றும், இனி மேலும் அந்த அடிப்படையிலேயே சேர்க்க இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளோம். இந்த உண்மையை பொது மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த பத்திரிகை விளம்பரம் செய்யப்படுகின்றது."

இதனை குருவின் தன்னிலை விளக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். தம்மை ஒரு (ஈழவ) சாதிக்குருவாகச் சித்தரிப்பதை அவர் ஏற்க மறுக்கிறார். தமக்கு சாதி அடையாளம் தரப்படுவதை அவர் எதிர்க்கிறார். தாம் எந்த ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரின் குருவுமல்ல; எந்த குறிப்பிட்ட மதத்தின் (இந்து மதக்) குருவுமல்ல என்று உ.றுதிபடக் கூறுகிறார்.

சாதிகளும் மடங்களும் 

குரு தம்மை மட்டுமே சாதி மறுப்பிற்கு, சாதித் துறப்பிற்கு உள்ளாக்கினார் என்று விளக்க முற்படுவது விஷமத்தனமாகிவிடும். அவரது முயற்சியால் உருவான சீடர் அமைப்பு, துறவியர் அமைப்பில் சேர்ப்பதுவும், வாரிசுகளை நியமிப்பதும் சாதி என்ற அடையாளத்தை கருத்தில் கொள்ளாமல் தான் நடைபெற்று வந்தன.

அருவிப்புறத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தபின் அவர் நியமித்த பூசகர் சிவலிங்க சுவாமி ஈழவப் பிரிவினர் அல்லர். 1913இல் ஆலுவா அத்வைத ஆஸ்ரமத்தில் துறவிகளை சேர்க்கும்போதும், 1928இல் தர்ம சங்கத்தை உருவாக்கி அதில் துறவியருக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்த போதும் அதில் சாதி என்ற அடிப்படை ஒரு சிறிதும் கூட இருக்கவில்லை. நாயர், "பிராமணர்" போன்ற ‘சாதி' களைக் கொண்டவர்களெல்லாம் இதில் இருந்தனர்.

அத்வைதம் பேசிய சங்கரர் உருவாக்கிய மடங்களில் "பிராமணர்" மட்டுமே வாரிசுகளாக முடியும். சைவ சித்தாந்தம் பேசிய ஆதீனங்களிலும் சாதி அடிப்படையிலேயே வாரிசுகள் நியமனம் நடைபெறுகிறது. உண்மையில் இவையெல்லாம் சாதி மடங்களாகவே இருந்தன, இருக்கின்றன. சாதி மடங்களின் நிறுவனர்கள் மட்டும் எப்படி லோக குருக்களாக முடியும்? ஜகத்குருக்களாக முடியும்? நாராயணகுரு, ஆன்மீகத்தில் சமத்துவ அத்வைதத்தையும், நடைமுறை வாழ்க்கையில் சாதீய சனாதனத்தையும் கடைப்பிடிக்கும் போலித்தனத்தைக் கொள்ளாதவர். அதைத்தான் இந்த அறிக்கையில் - "யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை. குறிப்பாக நமது சீடர் குழுவிற்கும் மேற்படி உள்ளவர்களை (சாதி - மத உணர்வில்லாதவர்களை) மட்டுமே, எம்முடைய வாரிசாக வரத்தக்க வண்ணம் ஆலுவா ஆசிரமத்தில் சேர்த்துள்ளோம் என்றும், இனி மேலும் அந்த அடிப்படையில்தான் சேர்க்க இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளோம்." என்று அடிக்கோடிட்டு வலியுறுத்தியுள்ளார்.

ராமகிருஷ்ண மடம் போன்ற ஒரு சில மடங்களில் மட்டுமே சாதி கடந்தும் இளந்துறவியரை சேர்க்கும் நிலை உள்ளது. ஆனாலும் அவை சாதி - மறுப்பு மடங்களாக இருப்பதில்லை. நாராயண குருவால் உருவாக்கப்பட்ட துறவியர் அமைப்புகள்தான் சாதிகடந்து மட்டுமல்ல, சாதி மறுக்கும் தத்துவ அடிப்படையில் அமைந்துள்ளன.

(இந்த அறிக்கையில் குரு தமக்கு ஒரு (இந்து) மத அடையாளம் தரப்படுவதையும் மறுத்துள்ளார். (யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை) மதங்களுக்கிடையில் இணக்கம் என்ற நிலையில், மதங் களுக்கிடையில் ஆரோக்கியமான புரிதல் என்ற நோக்கில் ஆலுவா ஆசிரமத்தில் 1924இல்  ‘சர்வமத சம்மேளனம்' நடத்தப்பட்ட பொழுது குருவின் பங்கு ஆழ்ந்த பொருள் கொண்டது. அது அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத மாநாடு. இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம், ஜைனம், ஆரிய சமாஜம் என வெவ்வேறு மத அடையாளத்தில் உள்ளவர் களும் தத்தம் மதபோதனை களை, விளக்கி, போற்றிப் பேசினர். இந்து மதத்தை விளக்கி மஞ்சேரி ராமகிருஷ் ணய்யர் பேசினார். குரு மதங்களைக் கடந்த ஆன்மீகவாதி யாக, ஒரு வழிகாட்டியாக உரையாற்றினார். இந்து மதத் தைப் போற்றி அதனை நியாயப் படுத்தும் நிலைப்பாட்டை அவர் மேற்கொள்ளவில்லை. இந்து மதம் என்பது குறித்த அவரது கருத்துக்களை விளக்க இது தருணமல்ல. ஆனா லும் தம்மை ஓர் இந்துமத குரு என்ற நிலையில் அவர் வைத்துக் கொண்டதில்லை. ஏனெனில் அவர் மதங்கடந்த மனிதப் பொதுமையை ஏற்றுக் கொண்டவர், எடுத்துரைத்தவர்)

சாதிபேத மறுப்பு

சாதி - மதம் தொடர்பான நாராயண குருவின் முதல் அறிக்கை 1888இல் அருவிப்புறத்தில் சிவலிங்கம் பிரதிஷ் டைக்குப் பின்னர் அவராலேயே எழுதி வைக்கப்பட்டது..

சாதிபேதம் மதத்துவேஷம்
ஏதுமின்றி அனைவரும்
சோதரராய் வாழ்கின்ற
வழிகாட்டி இடமே இது.

சாதிபேதம் இன்றி என்பதற்கு ‘சாதி இன்றி' என்று பொருள் இல்லை. அவர்ண சாதியினருக்கு ஷண்மத (ஆகம)க் கடவுள் கோயில்களில் நுழைவு உரிமை மறுக்கப் பட்டிருந்த காலகட்டத்தில், அவர்ண சாதியினருக்கும் பேதமின்றி உரிமை என்ற உயரிய நோக்கம், சமூக நோக்கம் குருவின் நோக்கமாக அறிவிக்கப்படுகிறது. அது ஒரு முதல்படி, முதல் அடி மட்டுமே.

அதற்குப் பிறகு 28 ஆண்டுகளில் அவரது ஆன்மீக - சமூகப் பயணம் மேலும் உயர்வான லட்சியங்களை நோக்கி பயணித்தது. சமூகக் கொடுமைகள் என்னும் நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி என்பதாக சாதி பேதங்களை மறுத்தவர். சாதி என்னும் சமூக நோய் முதல் நாடியை மறுக்கும் அடுத்த கட்டமாக 1916ஆம் ஆண்டு அறிக்கையைக் காண வேண்டும்.

(தொடரும்)

நன்றி: விடுதலை

No comments:

Post a Comment