Saturday, 9 July 2016

அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சி!

வட அமெரிக்காவில் ஆண்டு தோறும் சூலை 4 (அமெரிக்கா விடுதலை நாள்) விடுமுறையை ஒட்டி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெரும் விழா எடுக்கும். அதில் அமெரிக்கா, கனடா நாட்டுத் தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுக் குடும்பங் களாக வந்து மகிழ்வர். இந்த ஆண்டு 29ஆவது ஆண்டு விழாவைப் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் 125ஆவது பிறந்த நாள் விழா, தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா என்று சிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விழாவின் மய்யக் கருத்தே " தமிழ்ப் பள்ளி... தமிழ்க் கல்வி..." என்பதாகும். சுமார் 30 ஆண்டுகட்கு முன்பிருந்தே அமெரிக்காவின் பல நகரங்களிலே சனி,ஞாயிறு நாட்களில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. இன்று அமெரிக்காவின் முக்கிய நகரங்களிலே தமிழ்ப் பள்ளி இல்லாத நகரங்களே இல்லை எனும் அளவிற்குச் சிகாகோ போன்ற நகரங்களிலே 7 தமிழ்ப் பள்ளிகள் 200க்கும் மேற்பட்டக் குழந்தைகளுடன் நடக்கின்றன. அழகான தமிழ் பேசி மேடைகளில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். திருக்குறள் போட்டிகள், சங்க இலக் கியப் பாடல்கள் இசைத்தல் என்று வளம் பெற்றுள்ளனர்.

1330 குறள்களையும் எண், அதிகாரம், பொருள், ஆரம்பம், முடிவு என்று பல விதங்களில் சொல்லும் 5 குழந்தைகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண் டனர்அய்ந்தாம் வகுப்பே படிக்கும் மின்னிசோட்டா சிவாநந்தனின் மகள் முதல் பரிசைப் பெற்றார் ! அதைவிடச் சிறப்பு அவருக்குக் கிடைத்த 500 டாலர் பரிசை ஹார்வேர்ட் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை நிறுவும் முயற்சிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரது அன்னையார்அவரும் 1330 குறள் களையும் அறிந்தவர். ஒரு இரண்டு வய துப் பெண் அருமையாகத் திருக்குறள் சொன்னது அனைவரையும் மகிழ்வித்தது.

விழாவிற்கு வந்திருந்த தமிழ்ப் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அனைவரும் மேடைக்கு வரவழைக்கப்பட்டுப் பாராட்டப் பெற்றனர்.

பேரவைத் தலைவர் தந்தை பெரியார் பற்றாளர் நாஞ்சில் பீற்றர் அவர்கள் ஒரு உண்மைச் செயல் வீரர். பத்தாவது ஆண்டாக இலக்கிய வினாடி வினா என்று மிகச் சிறப்பான நிகழ்ச்சியை நடத்தினார்.

ஒவ்வொரு அணியிலும் 50 பேர் ஆண்,பெண் சிறுவர் என்று. அவர் களுக்கு முன்பே சங்க இலக்கியம், திருக்குறள், பாரதிதாசன் போன்ற கவிஞர்கள், இலக்கிய சமுதாயப் படைப்புகள் என்று குறிப்பிட்டுக் கொடுத்து மூன்று மாதங்கட்கு மேல் குழுவாகப்  படித்து வந்திருந்தனர். ஒரு மணித்துளியில் பதில் சொல்ல வேண்டும். இசையுடன், தமிழகக் காட்சிகளுடன் கூடிய கேள்வி திரையில் தெரியும். அதற்குத் தமிழண்ணல் அணியும், .சு.. மாணிக்கனார் அணியினரும் பதில் சொன்னார்கள்.
கேள்விகள் முனைவர்களுக்கே கடினமானவை என்று வந்திருந்த தமிழறிஞர்களே சொன்னார்கள். 50 வினாக்களுக்கும் போட்டி கடுமையாகிக் கடைசியில்  இரு அணிகளும் ஒரே மதிப்பெண்  பெற்றனர் என்று பேரா சிரியர் இராமசாமி (முன்னாள்  மனோன்மணி, வார்சா பல்கலை) தலை மையிலான குழு அறிவித்தது.

குழந்தைகட்குத் திருக்குறள் தேனீ  சிறப்பாக நடந்தது. சிறுவர் சிறுமியர் பட்டி மன்றம்  "தனித்தமிழ் குழந்தை களிடம் போய்ச் சேராதிருக்க முக்கிய காரணம் பெற்றோரா? சமுதாயமா?" என்று கடுமையாகவும், சிரிப்பும் சிந்தனையுமாகவும் அழகு தமிழில் குறுகிய நேரத்தில் சிறப்பாகக் கருத்துக்களை வழங்கினர். பெற்றோர் தமிழ் பேசாமை, ஆங்கில மம்மி, டாடி மோகம், தமிழ்ப் புத்தாண்டு தையா, சித்திரையா குழப்பம், தமிழின் பெருமை இலக்கிய வளம் சொல்லித் தராமை என்று அடுக்கினர். சமுதாயம் -_ முக்கிய மாகத் தொல்லைக் காட்சி பத்து மணித் துளி பார்த்தாலே தமிழ் பேசுபவரும் தமில் பேசும் தமிங்கலர் ஆகி விடும் அவலம், அரசு தமிழுக்கும், தமிழில் படிப்போர்க்கும் ஆதரவு தராமை, ஊடகங்களின் அநியாயத் தமிழ்ப் படுகொலை என்று அடுக்கினர்.

மதுரை பேராசியர் இரா.மோகன் அவர்கள் இரண்டு கண்களாக பெற்றோரும், சமுதாயமும் செயல் பட வேண்டும் என்று’’ தீர்ப்பளித்தார்.
பல செயல் வீரர்கள் தமிழுக்காக இணையத்தில் செய்துவரும் பணிகள், தமிழ் பிழை திருத்தி, தமிழ் நூல்கள், இணையத் தொகுப்பு, தமிழ் விக்கிப் பீடியா நிறுவனரின் சொற்பொழிவு, தமிழ் இசைப் பயிற்சி, பயிலரங்கம், என்றும் மற்றும் மாதந்தோறும் நடக்கும்’’ தொலைப்பேசியில் தமிழ் இலக்கிய கருத்தரங்கங்கள் பற்றிய செய்திகளும் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

அந்தந்தத் தமிழ்ச் சங்கங்களின் திறமைகள் பறை இசையாகவும், சிலம்பாட்டம், கும்மி,கோலாட்டம், மயிலாட்டம், நடனங்கள், நாட்டிய நாடகங்கள் என்றும் காட்டப்பட்டன. சங்கங்களின் சங்கமம் என்று ஒவ்வொரு சங்கமும் ஆட்ட பாட்டங்களுடனும், இசைக் கருவிகளுடன்  பறை அடித்தும்  நடந்த ஊர்வலம் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்திலும், ஒரு பெரிய தமிழ்க் குடும்பம் என்றும் புளகாங்கிதம் அடையச் செய்தது.

கவியரங்கம், கருத்தரங்கங்கள் எப்போதும் போல. இந்த ஆண்டு தனித் தமிழ் இயக்கத் தலைவர்கள் மறைமலை அடிகள், பாவாணர், பரிதிமாற் கலைஞர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், கி..பெ. தந்தை பெரியார் முயற்சிகள் எடுத்துரைக்கப் பட்டன. தமிழ்மண் பதிப்பக இளவழகனார் பாராட்டப் பட்டார். அவரது மறைமலை அடி களார் முழுத் தொகுப்பு வெளியிடப் பட்டது.

முனைவர் பிரபாகரன் தமிழக மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட் டுக் கடைசியில் வேற்றார் உள் நுழையக் காரணமாயினர். மன்னர்களை மயக்கி வடமொழி திணிக்கப்பட்டது. தனித் தமிழ் இயக்கம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வந்தது, தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தமிழ் மறு மலர்ச்சியைக் கொண்டு வந்தனர் என்றார்.

பேராசிரியர் இராமசாமி, பேரா சிரியர்கள் இரா.மோகன், இராதா மோகன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், ஆசிரியர்கள் முத்துசாமி (முன்னாள் மேலவை உறுப் பினர்),அன்பில் நாகராசன் ,அனைவரும் தமிழர்களின் மீது திணிக்கப்படும் சமஸ்கிருதத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம், பெரியார் அவர்களின் கொள்கையின் தேவை பற்றி எடுத்துரைத்தனர்.

ஹார்வே பல்கலைக் கழகத் தமிழ் இருக்கை பற்றிய அறிவிப்பும், பொருள் சேர்த்தலும் நடந்தது.

அமெரிக்காவில் இளைய தலை முறை தமிழ் கற்று வருவதும், ஏனையோர் தமிழ் இலக்கியம் கற்று வருவதும், உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டு சிகாகோ பல் கலைக் கழகத்துடன் இணைந்து சிகாகோவில் தமிழ்ச் சங்கமும், பேரவையும் நடத்தும் என்ற அறிவிப்பும் அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சியின் நல்ல அறிகுறிகள் !

வாழ்க தமிழ் ! வளர்க பகுத்தறிவும், தனித் தமிழும்!


-         செய்தி: டாக்டர் சோம.இளங்கோவன்  நன்றி: விடுதலை 09/07/16

No comments:

Post a Comment