Tuesday 5 April 2016

“பாரத மாதாஹி ஜே!’’ என்பதும் இந்தியாவை பாரதம் என்பதும் தப்பு! சாஸ்திர விரோதம்!




மனுஸ்மிருதி ஆதாரம் இதோ!
பொய்யை மெய்யாய் காட்டுவதும்; இல்லாததை இருப்பதாய்க் காட்டுவதும்; பிறருடையதைத் தன்னுடையது என்பதும்; பலதை ஒன்று என்பதும் ஒன்றை பலதாக்குவதும் ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சியாகும். இந்துமதம் என்று ஒரு மதமே இல்லை. இந்தியாவிலிருந்த பல கடவுள் நம்பிக்கைகளை ஒன்றாக்கி அதுதான் இந்துமதம் என்று பித்தலாட்டம் செய்து பிழைப்பபதோடு, அதை வைத்தே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரி யாரே, இதை ஒத்துக்கொண்டு கீழ்க் கண்டவாறு கூறுகிறார்: “இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்.” தெய்வத்தின் குரல், பாகம்-1, பக்கம் 125
கற்பனைகளையெல்லாம் புராணங்களாக்கி, அவை நடந்தவை என்று மக்களை நம்பச் செய்து முட்டாளாக்கி, பொழுதையும், பொரு ளையும் பாழாக்கச் செய்தனர். பிறருடைய கலை, மருத்துவம், மொழி, நாடு, பொருள் இவற்றைத் தன்னுடையது என்றனர். பிச்சையெடுத்துப் பிழைக்க வந்தவர்கள், மண்ணின் மக்களை இழிமக்கள் என்று தாழ்த்தி தாங்களே உயர்ந்தவர்கள், தங்களுக்கு அடிபணிந்தே மற்றவர்கள் வாழவேண்டும் என்றனர்.
அதேபோல் பல நாடுகளாக இருந்த இந்தியப் பகுதியை ஒன்று என்றனர். ஒன்றாக இருந்த திராவிடர்களைப் பல வருணங்களாகப் பல ஜாதிகளாகப் பிரித்தனர். இந்தியா என்று ஒரு நாடே இல்லை. இப்பகுதி பல குறு, சிறு, பெரு நாடுகளாய் இருந்தது. 54 தேசங்களாய் இருந்ததாய் பல்வேறு கதைகளில் சொல்லப்படுகின்றன. அரிச்சந்திரன் மயானத் தில் நின்று கலங்கியபோதுகூட இந்த 54 தேசங்களையும் வரிசையாய் சொல்வதை அரிச்சந்திரன் நாடகத்தில் கேட்கலாம்.
ஆரிய பார்ப்பனர்களின் உயிர்நாடியாய் விளங்கும் மனுதர்ம சாஸ்திரமே இந்தியா இல்லை என்கிறது. இது பல நாடுகளாய் (தேசங்களாய்) இருந்தது என்கிறது. பாரதம் என்பது பல தேசங்களுள் ஒன்று என்கிறது. இந்திய தேசங்களுள் ஒன்றான பாரதம் என்ற பகுதியை இந்தியா முழுமைக்கும், அதையும் தாண்டி பாகிஸ்தானையும் சேர்த்து பாரதம் என்பது அடாவடிச் செயல், அயோக்கியச் செயல் அல்லவா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் அண்மை யில் பாரதத்தை ஏற்காதவர்கள் பாகிஸ்தானைப் பிரித்தனர் என்கிறார். பகவத்தும், ஆர்.எஸ்.எஸ்.ம், அவர்களின் பரிவாரங்களான பி.ஜே.பி. உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஏற்றிப் போற்றும், நடைமுறைப்படுத்தத் துடிக்கும் மனுஸ்மிருதி என்ன சொல்கிறது? கீழே படியுங்கள், “பௌண்டாம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம். இந்தத் தேசங்களை ஆண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரனாய் விட்டார்கள்.
(மனுஸ்மிருதி 10ஆம் அத்தியாயம்-44)
மனுஸ்மிருதியின்படி பாரதம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. திராவிடம் போல, யவநம் போல, சகம் போல, தரதம் போல அது ஒரு தேசம். அப்படியிருக்க பல தேசங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு நாட்டைப் பாரதம் என்பதும், அதை அகண்ட பாரதம் ஆக் குவோம் என்பதும், மனுஸ்மிருதிக்கும், உண்மைக்கும் எதிரானதல்லவா? சாஸ் திரத்திற்கு புறம்பான சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதற்கு எதிரான உண்மைக்கு மாறான ஒரு கொள்கையை அடையத் துடிப்பது அநியாயம் அல்லவா?
இதில், “பாரத மாதா’’ என்பதும், “பாரத மாதாஹி ஜே!’’ என்பதும், அதைச் சொல்லாதவர்கள் தேச விரோதிகள் என்பதும் இந்திய அரசியல் அமைப்பிற்கும், மனுஸ்மிருதிக்கும் எதிரானதல்லவா? எனவே, “பாரதம்’’ என்பவர்களும், “பாரத மாதா’’ என்பவர்களும், “பாரத மாதாஹி ஜே!’’ என்பவர்களுமே தேசத் துரோகிகள் என்றாகிறது! மனுஸ்மிருதிபடி இதுதானே சரி! ஆக, பாரதம், அகண்ட பாரதம், பாரத மாதாஹி ஜே! என்பதெல்லாம் தேச விரோம், சாஸ்திர விரோதம் என்பது உறுதியாகிறது!
-மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment