Friday, 26 February 2016

நடிகை பார்வதி-யை பாராட்டுவோம்!

ஜாதி, மதத்தில் நம்பிக்கையில்லை! மனம் திறக்கிறார் நடிகை பார்வதி:


"பூ', "சென்னையில் ஒரு நாள்', "மரியான்', "உத்தம வில்லன்' என தேர்வாகத்தான் நடித்து வரும்  நடிகை பார்வதியின் மனம் திறந்த பேட்டி

பார்வதி மேனன் என்பதில் மேனன் என்ற பெயரை ஏன் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டீர்கள்...?

ஆமாம்... அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மதம், என் ஜாதி என பிரபலப்படுத்தி ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஜாதியின் பெயரை சொல்லித்தான் என்னை அடையாளப்படுத்த வேண்டி இருந்தால், அப்படியோர் அடையாளம் எனக்கு தேவையில்லை.

நடிகையை நடிகையாக மட்டுமே பாருங்கள். அவர்களது சொந்தப் பிரச்னையைப் பேச வேண்டாம். ஏனென்றால் நடிகை பொதுச் சொத்து அல்ல. உங்களின் தங்கை, அக்கா, மனைவி, குழந்தை போல் அவளும் ஒரு பெண். தயவு செய்து நடிகையின் தேகத்தை வன்மத்தோடு அணுகாதீர்கள்!

விஜய், அஜித், விக்ரம், சூர்யா என மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்திருக்குமே....?
அது எனக்கு சரியாக வராது. ஏனென்றால் நான் கதைகளுக்கே முக்கியத்துவம் தருகிறேன். ஒரு மாஸ் ஹீரோவுக்காக என்னால் அரை குறை ஆடைகளை உடுத்தி வந்து நடனம் ஆட முடியாது. ஏதோ ஒரு படத்தில் நமக்கும் வேலை இருக்கிறது என்று என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது. என் பங்கு அந்தப் படத்துக்கு முழு அளவில் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அந்த வாய்ப்புகளே எனக்கு வேண்டாம். பெரிய ஹீரோக்களோடு நடிக்கும் போது முன்னணி இடத்துக்கு வரலாம். ஆனால் திருப்தி இருக்காது. பசி வந்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் என்னால் சாப்பிட முடியாது. எனக்கான மீனுக்காக காத்திருக்க நான் தயார்.
இப்படி பேசினால் எப்படி....?
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது என் சினிமா நிலைப்பாடு. என் கதைகள் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என் கேரக்டர் அந்தக் கதையை சுவாரஸ்யப்படுத்த வேண்டும். இது இரண்டும் இல்லாத இடத்தில் நான் இருக்கவே மாட்டேன். "பூ' அளவுக்கு இதுவரைக்கும் தமிழில் எந்த கேரக்டரும் கிடைக்கவில்லை. "மரியான்' பனிமலர்தான் அந்தளவுக்கு சவால் தந்தது. அது மாதிரி இருந்தால் ஆசை ஆசையாக நடிக்க தயார்.

நன்றி: தினமணி 20/01/2016

No comments:

Post a Comment