Monday, 29 February 2016

தமிழ்மொழியில் B.A. Ed படிக்க சிங்கப்பூர் போகலாம்..


சிங்கப்பூரில் முதன்முறையாக முழு நேர தமிழ்மொழி இளங்கலைப் பட்டப்படிப்பு (B.A. Ed) இவ்வாண்டு தொடக்கம் காணவிருக்கிறது. கல்வி அமைச்சும் தேசிய கல்விக் கழகமும் ஒன்றிணைந்து நீண்டகால கூட்டு முயற்சியின் பயனால் புதிய கல்வி ஆண்டில், அதாவது எதிர்வரும் ஜூலை மாதத்தில் பட்டப்படிப்பு தேசிய கல்விக் கழகத்தில் தொடங்கும். உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட தமிழ்மொழி கற்பித் தல் தொடர்பான தகவல் நிகழ்ச்சியில் இவ்விவரங்கள் அளிக்கப் பட்டன.

முழுநேரமாக நான்கு ஆண்டுகளுக்கு நடத்தப்படவிருக்கும் இப்பட்டப்படிப்பை மேற்கொள்ள தொடக்கக் கல்லூரியில்நிலை கல்வித் தகுதி பெற்ற, பல துறைத் தொழிற்கல்லூரியில் பட்டயக் கல்வியை முடித்த, ‘ஐபிஎனப்படும் அனைத்துலக பெக்கலரெட் கல்வித் தகுதி பெற்ற மாணவர்கள் விண் ணப்பிக்கலாம். அத்துடன், தமிழ்மொழிக் கற் பித்தலில் ஆழ்ந்த விருப்பமும் மாணவர்களுடன் பணியாற்ற ஆர் வமும் ஆசிரியர் பணியில் மன நிறைவும் இருப்பது அவசியம். தமிழ்மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்புக் குறித்த தகவல்களு டன் கல்வியியல் பட்டயக் கல்வி (Dip. Ed), பட்டமேற்படிப்புப் பட் டயக் கல்வி (PGDE) ஆகிய பிற ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் பற்றிய விவரங்களும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டன.


 இப்பயிற்சித் திட்டங்களின் மூலம் மாணவர்கள் பெறவிருக்கும் அனுகூலங்கள் குறித்து மூத்த கல்வியாளர்கள், தலைமை முதன்மை ஆசிரியர், தேசிய கல்விக் கழக விரிவுரையாளர்கள் வந்திருந்த சுமார் 160 மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கம் அளித்தனர்

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நேற்று நடந்த தகவல் நிகழ்ச்சியில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவு 1, தாய்மொழிகள் துறை துணை இயக்குநர் திருவாட்டிச் சாந்தி செல்லப்பனிடம் (நடுவில் வெள்ளை உடையில் இருப்பவர்) ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் குறித்த ஐயங்களை மாணவர்களும் பெற்றோர்களும் கேட்டறிகின்றனர்.  
நன்றி: சிங்கப்பூர் தமிழ் முரசு 28/02/2016

Sunday, 28 February 2016

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வந்தது எப்படி?


1909ஆம் ஆண்டு மார்ச் மாதம்...

சென்னைப் பல்கலைக் கழகப் பேரவையின் (செனட்) சிறப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. அக்குழுவி ன் ஒருங்கிணைப்பாளரான பி.ஆர். சுந்தரம் அய்யர், ஒரு தீர்மானத்தை முன் மொழிகின்றார். கல்லூரி இடைநிலை வகுப்பில் (Intermediate Course) தமிழ் ஒரு பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பதும், அதற்காக ஒரு தேர்வை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய தில்லை என்பதும்தான் அத்தீர்மானம் மாறாக, சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், அத்தீர்மானத்தின் பிற்பகுதி.

அவையில் சில எதிர்ப்புகள் எழு கின்றன. ஆதரித்துப் பேச எழுகின்றார் ஜி.நாகோஜிராவ். இந்நாட்டின் இலக் கியம், தத்துவம், சமயம் அனைத்தும் சமற்கிருத மொழியோடுதான் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. எனவே, வட்டார மொழிகளை விட்டு விட்டு, சமற்கிருத மொழிக்கே ஊக்கம் தரப்பட வேண்டும்’’ என்கிறார் ராவ்.

சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசிரியராக அன்று இருந்த மார்க்ஹன்டர், இது போன்ற முடிவுகளை எடுக்கும் முன் நிதானம் தேவை என்கிறார். டி. ராமகிருஷ்ண பிள்ளை செத்த மொழி யான வட மொழிக்கு ஏன் ஊக்கம் தர வேண்டும்? தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் கட்டாயம் பாடமாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.

இறுதியில் தீர்மானம் வாக்கெடுப் பிற்கு வீடப்படுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்ததால், சுந்தரம் அய்யர் முன்மொழிந்த தமிழுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படு கின்றது.

நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியபின்தான். நிலைமை மாறு கின்றது. அக்கட்சியின் சார்பில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட இராம ராயநிங்கர், வைஸ்ராயிடம் ஒரு மனு அளிக்கின்றார். சமற்கிருதத்தோடு பல் வேறு சமூக, சமய முரண்களைக் கொண்டிருப்பதால், பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் திராவிட மொழிகளே முதன்மை யானவை, வடமொழி அன்று’’ எனக் குறிப்பிட்டு, மீண்டும் தமிழ்ப்பாடம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், 1924 பிப்ரவரியில், சென்னை, பச்சையப் பன் கல்லூரியில், தமிழ்க் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்அன்றைய அமைச்சர், டி.என். சிவஞானம் பிள்ளை தமிழ்ப் பாடத்தின் தேவையை வலியுறுத்திப் பேசுகின்றார்.

இறுதியில், 1926ஆம் ஆண்டு இடை நிலை வகுப்பிற்கு மீண்டும் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு வரப்படுகின்றது.

(சான்று: The Madras Mani, The Hindu  முதலான ஆங்கில நாளேடுகள் வெளி யிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், கே. நம்பி ஆரூரன் எழுதியுள்ள Tamil Renaissance and Dravidan Nationalisam  மற்றும் முனைவர் அ. இராமசாமி எழுதியுள்ள அண்ணாவின் மொழிக் கொள்கை’’ ஆகிய நூல்கள்)
நன்றி: விடுதலை28/02/2016

Saturday, 27 February 2016

இதய நோயாளிகளுக்கு பேஸ் மேக்கரை கண்டுபிடித்த ஆல்பிரட் இ மான் மரணம் - வீரவணக்கம்!

இதய நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் பேஸ் மேக்கர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் கருவியை கண்டுபிடித்த ஆல்பிரட் மான் (Alfred E. Mann) தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார்.

சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகனாக அமெரிக்காவில் பிறந்த மான், வரிசையாக பல தொழில்களை தொடங்கினார். அவர் தொட்டதெல்லாம் வெற்றிகரமாக துலங்கிதையடுத்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிலில் இறங்கினார்.

இதய நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் பேஸ் மேக்கர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் கருவி போன்றவற்றை இவரது மான்கைன்ட் நிறுவனம் கண்டுபிடித்தது. பின்னர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான சோலார் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை தயாரித்த இவர் பெரும் கொடையாளராகவும் விளங்கினார்.

MannKind Corporation என்ற நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்துவந்த ஆல்பிரட் மான் தனது 90-வது வயதில் கடந்த வியாழக்கிழமை (25 February 2016) மரணம் அடைந்தார்.


அவர் கண்டுபிடித்த பேஸ் மேக்கர் மற்றும் இன்சுலின் ஏற்றும் கருவியால் இவ்வுலகில் பல கோடி மக்கள் பயன்பெற்று உயிருடன் வாழ்வதற்கு காரணமாக இருந்த மறைவுற்ற ஆல்பிரட் மான்-க்கு வீரவணக்கம் ! 

Friday, 26 February 2016

நடிகை பார்வதி-யை பாராட்டுவோம்!

ஜாதி, மதத்தில் நம்பிக்கையில்லை! மனம் திறக்கிறார் நடிகை பார்வதி:


"பூ', "சென்னையில் ஒரு நாள்', "மரியான்', "உத்தம வில்லன்' என தேர்வாகத்தான் நடித்து வரும்  நடிகை பார்வதியின் மனம் திறந்த பேட்டி

பார்வதி மேனன் என்பதில் மேனன் என்ற பெயரை ஏன் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டீர்கள்...?

ஆமாம்... அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மதம், என் ஜாதி என பிரபலப்படுத்தி ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஜாதியின் பெயரை சொல்லித்தான் என்னை அடையாளப்படுத்த வேண்டி இருந்தால், அப்படியோர் அடையாளம் எனக்கு தேவையில்லை.

நடிகையை நடிகையாக மட்டுமே பாருங்கள். அவர்களது சொந்தப் பிரச்னையைப் பேச வேண்டாம். ஏனென்றால் நடிகை பொதுச் சொத்து அல்ல. உங்களின் தங்கை, அக்கா, மனைவி, குழந்தை போல் அவளும் ஒரு பெண். தயவு செய்து நடிகையின் தேகத்தை வன்மத்தோடு அணுகாதீர்கள்!

விஜய், அஜித், விக்ரம், சூர்யா என மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்திருக்குமே....?
அது எனக்கு சரியாக வராது. ஏனென்றால் நான் கதைகளுக்கே முக்கியத்துவம் தருகிறேன். ஒரு மாஸ் ஹீரோவுக்காக என்னால் அரை குறை ஆடைகளை உடுத்தி வந்து நடனம் ஆட முடியாது. ஏதோ ஒரு படத்தில் நமக்கும் வேலை இருக்கிறது என்று என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது. என் பங்கு அந்தப் படத்துக்கு முழு அளவில் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அந்த வாய்ப்புகளே எனக்கு வேண்டாம். பெரிய ஹீரோக்களோடு நடிக்கும் போது முன்னணி இடத்துக்கு வரலாம். ஆனால் திருப்தி இருக்காது. பசி வந்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் என்னால் சாப்பிட முடியாது. எனக்கான மீனுக்காக காத்திருக்க நான் தயார்.
இப்படி பேசினால் எப்படி....?
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது என் சினிமா நிலைப்பாடு. என் கதைகள் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என் கேரக்டர் அந்தக் கதையை சுவாரஸ்யப்படுத்த வேண்டும். இது இரண்டும் இல்லாத இடத்தில் நான் இருக்கவே மாட்டேன். "பூ' அளவுக்கு இதுவரைக்கும் தமிழில் எந்த கேரக்டரும் கிடைக்கவில்லை. "மரியான்' பனிமலர்தான் அந்தளவுக்கு சவால் தந்தது. அது மாதிரி இருந்தால் ஆசை ஆசையாக நடிக்க தயார்.

நன்றி: தினமணி 20/01/2016

Thursday, 25 February 2016

கி.பி., கி.மு


 
இயன்ற வரையில், மதச் சார்பற்ற சொற்களை நாம் பொதுத்தளங்களில் பயன்படுத்த முயற்சிக்கலாம். வரலாற்றில் ஆண்டுகளைக் குறிக்கும்போது கி.மு., கி.பி. என்னும் குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம். கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறந்ததற்குப் பின் என்னும் இவை மதச் சார்புடையவை.இதே போலத்தான் ஆங்கிலத்திலும் B.C., A.D., என்று குறித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது,Before Christ, Amno Domni என அவை விரியும். Amno Domni என்றால் after death, இயேசு இறந்ததற்குப் பின் என்று பொருள். இன்றைக்கு அந்தக் குறியீடுகளை அவர்கள் BCE, CE என்று மாற்றிவிட்டார்கள். Before Common Era, Common Era என அவை ஆகி விட்டன. நாமும் அது போலவே, தொடர் ஆண்டுகளின் முன், தொடர் ஆண்டுகளில் என்று குறிப்பிடலாம். சுருக்கக் குறியீடுகளில், தொ..மு., என்றும், தொ.., என்றும் ஏன் எழுதிப் பழகக் கூடாது?

நன்றி: பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

Wednesday, 24 February 2016

அரசுப் பள்ளியில் தமிழ்வழிப் படித்தால் அய்.ஏ.ஸ். ஆக தடையில்லை!

நீங்கள் எடுத்துக்கொண்ட இலட்சியத்தில் மனஉறுதி கொண்டவராக இருந்தால் உறுதியாய் அய்..எஸ். தேர்வில் வெற்றி பெறலாம்.
நீங்கள் அஞ்சல்வழியில் படித்ததோ, அரசுப்பள்ளிகளில் படித்ததோ, தமிழ்வழியில் படித்ததோ வெற்றிக்குத் தடையாக இருக்காது.

நீங்கள் கிராமப்புறத்தில் இருந்து வந்திருக்கலாம். தேவையான பணபலம் இல்லாமல் இருக்கலாம். வழிகாட்டுவதற்கு குடும்பத்தில் நிறையப் படித்தவர்கள் இல்லாமல் இருக்கலாம். இவையெல்லாம் சாதனைக்குத் தடையல்ல. இதற்கு சங்கர்கணேஷ் என்ற கிராமத்து மாணவரே சான்று.

சங்கர்கணேஷ் சாதாரண விவசாயக் குடும்பத்தில்கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படித்தவர். 10ஆம் வகுப்பு வரைதான் பள்ளியில் படித்தார். பள்ளிப் படிப்பினைத் தொடர பொருளாதார வசதியில்லை. ஏதேனும் ஒரு வேலை செய்து கொண்டு பின் படிக்கலாம் என்ற சிந்தனையில் தொழிற்கல்வி 3 ஆண்டுகள் படிக்கிறார். அதனை வைத்து வேலை தேடுகிறார். வேலை கிடைக்கிறதுவேலை பார்த்துக் கொண்டே தொலைநிலைக்கல்வியில் இளநிலை பொருளியல் படிக்கின்றார்.

பொருளியல் பட்டம் பெற்று அய்..எஸ். தேர்வுக்கான அடிப்படைக் கல்வித் தகுதியினை பெறுகிறார்.

பெரும்பாலும் குடிமைப்பணித் தேர்வுகளில் விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்யும்போது ஏற்கனவே தேர்வினை எழுதி வெற்றி பெற்றவர்களிடமோ அல்லது நேர்முகத்-தேர்வுவரை சென்றவர்களிடமோ ஆலோசனைகள் பெறுவது வழக்கம்.

இவ்வாறு ஆலோசனைகள் பெறும்போது பெரும்பாலான வெற்றியாளர்கள் வரலாறு, புவியியல், பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல், தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களாக இருந்தால், தமிழ் இலக்கியம் போன்ற பாடங்களையே விருப்பப்பாடங்களாக எடுத்திட பரிந்துரைப்பது உண்டு. போட்டித் தேர்வு எழுதப் போகிறவர்களும் மேலே கூறியவற்றையே விருப்பப் பாடங்களாகத் தேர்வு செய்வதும் உண்டு. ஆனால் சங்கர் கணேஷ் பொருளியலை விருப்பப்பாடமாக எடுத்துக் கொண்டார். அவராகவே குறிப்புகளை எடுக்கவும், படிக்கவும் தொடங்கிவிட்டார்.

ஒரு சிறிய வழிகாட்டுதலுக்காக தொடக்க காலத்தில் பொருளியல் பாடத்தினை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்து அப்பாடத்தில் அதிக மதிப்பெண்களும் பெற்று வெற்றி பெற்ற எஸ்.சங்கரவடிவேலு என்ப-வரைப் பார்க்கச் செல்கிறார். அவர் இந்திய வருவாய்ப்பணியில் இணை ஆணையராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

அவரும் இவரது முயற்சிக்குத் தடை சொல்லாமல் சில எதார்த்த சூழல்களையும், வழிகாட்டுதல்களையும் கூறி உற்சாகப் படுத்துகிறார். தனது முயற்சி கடுமையானதாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை சங்கர்கணேஷ் உணர்கிறார். அதற்குத்தக்கவாறு திட்டமிட்டு தேர்வுக்குத் தயாராகிறார்.

பெரும் முயற்சிக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு நேர்முகத்தேர்வுக்குச் செல்கிறார். நம்பிக்கை-யோடு எதிர்கொள்கிறார். இருந்தும் வெற்றி வாய்ப்பு நழுவுகிறது.

பொதுவாக தமிழ்நாட்டில் குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கும் தயாராவது வழக்கமான ஒன்று.
ஆனால், சங்கர் கணேஷ் குடிமைப்பணித் தேர்வுகளைத் தவிர வேறு தேர்வுகளை எழுதுவது மட்டுமல்ல, விண்ணப்பிப்பது கூட இல்லை. அத்தகைய முடிவோடும், உறுதியோடும் இருந்தார். காரணம், தன் இலக்கு மாறிவிடக் கூடாது என்பதற்காக.

நேர்முகத்தேர்வுக்குச் சென்று வெற்றி வாய்ப்பினை தவறவிட்டும் அவர் சோர்வடையவில்லை.

மீண்டும் 2009 ஆம் ஆண்டு நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறார். குறைவான மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை  மறுபடியும் இழக்கிறார்.

2010ஆம் ஆண்டு மீண்டும் நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறார். இவருக்கு இது 5ஆவது முயற்சி. தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிடுகிறது. ஆர்வத்-தோடும், அச்சத்தோடும் பட்டியலைப் பார்த்த அவருக்கு அளிவிலா மகிழ்ச்சி. ஆம். சங்கர்கணேஷ் தேர்வில் வென்றுவிட்டார்.

பொறியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள்கூட கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குத் தயாராகும் சூழலில், தொலை  தூரக்கல்வி வழியில் படித்த சங்கர்கணேஷ் அய்..எஸ் தேர்வை மட்டுமே எழுதுவேன் என்றுகூறி வெற்றி முத்திரையும் பதித்த இலட்சிய நோக்கு பாராட்டுக்குரியது.

எனவே, கிராமப்புறமா? தமிழ் வழியா? என்பது முக்கியமல்ல, எங்கு பயின்று வந்தாலும் உறுதியான உழைப்புடன் முயன்றால் இந்த உயர்வை எட்டலாம். கிராமப்புற மாணவர்களே இவரைப் பின்பற்றுங்கள்!


விருப்பப் பாடம் தேர்வு செய்கையில் உங்களுக்கு அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதைத் தேர்வு செய்யுங்கள். தோல்வியைக் கண்டு துவளாமல், மீண்டும் மீண்டும் முயலுங்கள். வெற்றி உறுதி!

நன்றி: உண்மை இதழ்