Tuesday, 30 August 2016

நாராயண குருவின் சாதி மறுப்பு

அ. கருணானந்தன்
மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவர்
விவேகானந்தர் கல்லூரி, சென்னை


1916ஆம் ஆண்டு...
தென்னிந்திய சமூக அரசியல் வரலாற்றில்,


ஏன்? இந்திய வரலாற்றிலேயே, திருப்பு முனைகளை உருவாக்கிய ஆண்டு. உலகப்போர் மும்முரமாக நடை பெற்று வந்த காலமது... போரின் முடிவில், இந்தியர்களுக்கு அதிகமான அரசியல் வாய்ப்புகளை, சலுகைகளை ஆங்கில காலனி அரசு தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சனாதன சமூகக் கட்டமைப்பையே மாற்ற வேண்டுமென்ற குறிக்கோளுடன் இரண்டு வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்வுகள் நடந்தன.

சாதீயத்தை முற்றிலுமாக மறுத்து, சிறீநாரயண குரு என்ற புகழ்பெற்ற ஆன்மீகத்துறவி ஓர் அறிக்கையை வெளியிட்டது, அந்த ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் நடந்தது.
அதே ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் சென்னையில் நீதிக்கட்சி உருவானது. ஒரு மாதத்திற்குப் பின் டிசம்பர் 20ஆம் நாள் புகழ்பெற்ற "பிராமணரல்லாதார் அறிக்கை" (ழிஷீஸீ-ஙிக்ஷீணீலீனீவீஸீ விணீஸீவீயீமீstஷீ) வெளியிடப்பட்டது.

இவை இரண்டுமே சாதிக்கும், சாதி ஆதிக்கத்திற்கும் எதிராக எழுந்த வலிமை மிக்க போர்க்குரலாக அமைந்தன.

சமூக சமத்துவம் - சமூக நீதி - சமூக ஒற்றுமை ஆகிய வற்றின் மூலமாகத்தான் சமூக மாற்றம் - சமூக முன்னேற்றம் போன்றவற்றை அடைய முடியும் என்ற சித்தாந்தம் ஆன்மீகமாகவும், அரசியலாகவும் உருமாற்றம் பெற்ற ஆண்டு என 1916அய் நாம் கொண்டாட வேண்டியுள்ளது.

"பிராமணீய" ஆதிக்கம் என்பதுவே சாதி - வருண மரபை அங்கீகரிப்பதன் மூலமாக நடைபெற்று வந்துள்ளது. நாராயண குருவின் சமூகப்புரட்சியும், டி.எம்.நாயர் - பிட்டி தியாகராயர் - நடேச முதலியார் போன்றோரின் சமூக அரசியலும், சனாதன மரபு என்று பூசி மெழுகப்படும் வருண - சாதி முறையை மறுக்க வேண்டும், ஒழிக்க வேண் டும்; சமத்துவ அடிப்படையிலான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல் பட்டவை.

சாதிச் சீர்திருத்தம் பேசியோரை தேசியவாதிகளாகவும், சாதிமறுப்பு - சாதி  ஒழிப்பு பேசியோரை வட்டார வாதிகளாகவும் சிறுமைப்படுத்தி இருட்டடைப்பு செய்ய தன்னல சக்திகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூகநீதியிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ளவர்கள், நாராயண குரு, பெரியார் - அம்பேத்கர் போன்றவர்களது விசாலப் பார்வையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியாகத்தான் நாராயண குருவின் சாதி மறுப்பு அறிக்கையின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாராயண குரு எந்த மாதத்தில், எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது குறித்து எந்த அய்யமும் இருப்பதில்லை.

ஆவணி (சிங்கம்) மாதத்து சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. அதனால்தான் ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து வரும் சதயம் நட்சத்திரத்தன்று ‘குரு ஜெயந்தி'யைக் கொண்டாடு கின்றோம்.

ஆனால், எந்த ஆண்டில் பிறந்தார் என்பது பற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. கி.பி. 1854 என்போரும், 1855 என்போரும், 1856 என்போரும் உள்ளனர். இன்று நாராயண குரு அமைப்புகள் 1854 என்பதை ஏற்று அதனடிப்படையில் குரு சகாப்தத்தைக் கணக்கிடுகின்றனர், அதன்படி இந்த ஆண்டை (2016) குரு வருடம் 162 என்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
குரு வாழ்ந்திருந்த காலத்தில் குருவின் சீடர்களாலும், குருவைப் போற்றுபவர்களாலும் அவரது அறுபது ஆண்டு நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குருவின் ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் அதனை ஆடம்பரமாகக் கொண்டாட குரு அனுமதிக்காவிட்டாலும், பிற இடங்களில் அது மிகச் சிறப்பாகவே கொண்டாடப்பட்டது

அறுபதின் சிறப்பு

இந்திய மரபுகள் சிலவற்றில், பஞ்சாங்கங்களின்படி அறுபது ஆண்டுகள் என்பது வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு சுழற்சி நிறைவடையும் நிலையைக் குறிப்பதாகும். ஒரு யுகத்தின் நிறைவு. மனித வாழ்க்கையில் அது முதிர்ச்சி யையும், பக்குவப்படுதலையும், நிறைவையும் குறிக்கும். தமிழ் ‘காலண்டர்கள்' அறுபது ஆண்டுகளுக்கும் அறுபது பெயர்களைத் தருகின்றன. பிறகு மறுசுழற்சி. இந்த அறுபது ஆண்டுகளுக்கான பெயர்களின் தோற்றம் பற்றி நாரத ருக்கும், விஷ்ணுவிற்கும் ஏற்பட்ட உடலுறவால் தோன்றிய தான அருவருப்பான புராணங்கள் கற்பிக்கப்பட்டதுண்டு. அதனை தந்தை பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள் கடுமையாகக் கண்டணம் செய்து நிராகரித்தும் உள்ளனர். ஆனால் நாம் இங்கே அறுபது (சஷ்டியப்தம்) என்று குறிப் பிடுவது அனுபவத்தாலும், அறிவாலும், சிந்தனையாலும், செயலாலும் ஒரு மனிதன் முதிர்ச்சி என்னும் (உதிர்ச்சி அல்ல) பக்குவ நிறைவைப் பெறும் காலகட்டம். நிறைவான வாழ்க்கையைப் பெற்றுவிட்ட ஒருவரைப் போற்றுகின்ற பண்பாட்டு மரபுதான் அறுபது அகவை நிறைவு நிகழ்ச்சி யாகும்.

ஆதிசங்கரர் அறுபதில் பாதியைத் தான் கடந்தார். ஏசுநாதரும் அவ்வாறே, விவேகானந்தர் நாற்பதோடு நின்றுவிட்டார். புத்தர் எண்பதைக் கடந்தார். மகாவீரரைப் போன்று நாராயண குருவும் 70 ஆண்டுகள் கடந்தும் வாழ்ந்தார். அந்த நாராயண குருவின் அறுபது வயது நிறைவு விழா அவரது வாழ்நாளிலேயே கொண்டாடப்பட்ட ஆண்டு... 1916. அதாவது, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர். அவரது தத்துவங்களும், லட்சியங்களும் மிகத்தெளிவாக உலகிற்கு அவராலேயே அறிவிக்கப்பட்ட ஆண்டு அது. 1916 மே 28 அன்று வெளியிடப்பட்ட அவரது அறிக்கை ‘சாதி மறுப்பு அறிக்கை' எனப் புகழ் பெறுகிறது.

"யாம் சாதி-மத பேதங்களைத் துறந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும் சில குறிப்பிட்ட பிரிவினர் நம்மை அவர்களுடைய இனத்தை (சாதியை)ச் சேர்ந்த வரராக எண்ணியும் பணியாற்றியும் வருவதாகவும், அதன் விளைவாக பலருக்கும் எம்மைப் பற்றி உண்மைக்கு புறம் பான எண்ணங்கள் உருவாகி உள்ளதாகவும் அறிகிறோம்."

"யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை. குறிப்பாக  நம்முடைய சீடர் குழுவிற்கும் மேற்படியுள்ளவர்களை (சாதி - மத உணர்வில்லாதவர்களை) மட்டுமே, எம்முடைய வாரிசாக வரத்தக்க வண்ணம் ஆலுவா ஆசிரமத்தில் சேர்த்துள்ளோம் என்றும், இனி மேலும் அந்த அடிப்படையிலேயே சேர்க்க இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளோம். இந்த உண்மையை பொது மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த பத்திரிகை விளம்பரம் செய்யப்படுகின்றது."

இதனை குருவின் தன்னிலை விளக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். தம்மை ஒரு (ஈழவ) சாதிக்குருவாகச் சித்தரிப்பதை அவர் ஏற்க மறுக்கிறார். தமக்கு சாதி அடையாளம் தரப்படுவதை அவர் எதிர்க்கிறார். தாம் எந்த ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரின் குருவுமல்ல; எந்த குறிப்பிட்ட மதத்தின் (இந்து மதக்) குருவுமல்ல என்று உ.றுதிபடக் கூறுகிறார்.

சாதிகளும் மடங்களும் 

குரு தம்மை மட்டுமே சாதி மறுப்பிற்கு, சாதித் துறப்பிற்கு உள்ளாக்கினார் என்று விளக்க முற்படுவது விஷமத்தனமாகிவிடும். அவரது முயற்சியால் உருவான சீடர் அமைப்பு, துறவியர் அமைப்பில் சேர்ப்பதுவும், வாரிசுகளை நியமிப்பதும் சாதி என்ற அடையாளத்தை கருத்தில் கொள்ளாமல் தான் நடைபெற்று வந்தன.

அருவிப்புறத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தபின் அவர் நியமித்த பூசகர் சிவலிங்க சுவாமி ஈழவப் பிரிவினர் அல்லர். 1913இல் ஆலுவா அத்வைத ஆஸ்ரமத்தில் துறவிகளை சேர்க்கும்போதும், 1928இல் தர்ம சங்கத்தை உருவாக்கி அதில் துறவியருக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்த போதும் அதில் சாதி என்ற அடிப்படை ஒரு சிறிதும் கூட இருக்கவில்லை. நாயர், "பிராமணர்" போன்ற ‘சாதி' களைக் கொண்டவர்களெல்லாம் இதில் இருந்தனர்.

அத்வைதம் பேசிய சங்கரர் உருவாக்கிய மடங்களில் "பிராமணர்" மட்டுமே வாரிசுகளாக முடியும். சைவ சித்தாந்தம் பேசிய ஆதீனங்களிலும் சாதி அடிப்படையிலேயே வாரிசுகள் நியமனம் நடைபெறுகிறது. உண்மையில் இவையெல்லாம் சாதி மடங்களாகவே இருந்தன, இருக்கின்றன. சாதி மடங்களின் நிறுவனர்கள் மட்டும் எப்படி லோக குருக்களாக முடியும்? ஜகத்குருக்களாக முடியும்? நாராயணகுரு, ஆன்மீகத்தில் சமத்துவ அத்வைதத்தையும், நடைமுறை வாழ்க்கையில் சாதீய சனாதனத்தையும் கடைப்பிடிக்கும் போலித்தனத்தைக் கொள்ளாதவர். அதைத்தான் இந்த அறிக்கையில் - "யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை. குறிப்பாக நமது சீடர் குழுவிற்கும் மேற்படி உள்ளவர்களை (சாதி - மத உணர்வில்லாதவர்களை) மட்டுமே, எம்முடைய வாரிசாக வரத்தக்க வண்ணம் ஆலுவா ஆசிரமத்தில் சேர்த்துள்ளோம் என்றும், இனி மேலும் அந்த அடிப்படையில்தான் சேர்க்க இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளோம்." என்று அடிக்கோடிட்டு வலியுறுத்தியுள்ளார்.

ராமகிருஷ்ண மடம் போன்ற ஒரு சில மடங்களில் மட்டுமே சாதி கடந்தும் இளந்துறவியரை சேர்க்கும் நிலை உள்ளது. ஆனாலும் அவை சாதி - மறுப்பு மடங்களாக இருப்பதில்லை. நாராயண குருவால் உருவாக்கப்பட்ட துறவியர் அமைப்புகள்தான் சாதிகடந்து மட்டுமல்ல, சாதி மறுக்கும் தத்துவ அடிப்படையில் அமைந்துள்ளன.

(இந்த அறிக்கையில் குரு தமக்கு ஒரு (இந்து) மத அடையாளம் தரப்படுவதையும் மறுத்துள்ளார். (யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை) மதங்களுக்கிடையில் இணக்கம் என்ற நிலையில், மதங் களுக்கிடையில் ஆரோக்கியமான புரிதல் என்ற நோக்கில் ஆலுவா ஆசிரமத்தில் 1924இல்  ‘சர்வமத சம்மேளனம்' நடத்தப்பட்ட பொழுது குருவின் பங்கு ஆழ்ந்த பொருள் கொண்டது. அது அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத மாநாடு. இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம், ஜைனம், ஆரிய சமாஜம் என வெவ்வேறு மத அடையாளத்தில் உள்ளவர் களும் தத்தம் மதபோதனை களை, விளக்கி, போற்றிப் பேசினர். இந்து மதத்தை விளக்கி மஞ்சேரி ராமகிருஷ் ணய்யர் பேசினார். குரு மதங்களைக் கடந்த ஆன்மீகவாதி யாக, ஒரு வழிகாட்டியாக உரையாற்றினார். இந்து மதத் தைப் போற்றி அதனை நியாயப் படுத்தும் நிலைப்பாட்டை அவர் மேற்கொள்ளவில்லை. இந்து மதம் என்பது குறித்த அவரது கருத்துக்களை விளக்க இது தருணமல்ல. ஆனா லும் தம்மை ஓர் இந்துமத குரு என்ற நிலையில் அவர் வைத்துக் கொண்டதில்லை. ஏனெனில் அவர் மதங்கடந்த மனிதப் பொதுமையை ஏற்றுக் கொண்டவர், எடுத்துரைத்தவர்)

சாதிபேத மறுப்பு

சாதி - மதம் தொடர்பான நாராயண குருவின் முதல் அறிக்கை 1888இல் அருவிப்புறத்தில் சிவலிங்கம் பிரதிஷ் டைக்குப் பின்னர் அவராலேயே எழுதி வைக்கப்பட்டது..

சாதிபேதம் மதத்துவேஷம்
ஏதுமின்றி அனைவரும்
சோதரராய் வாழ்கின்ற
வழிகாட்டி இடமே இது.

சாதிபேதம் இன்றி என்பதற்கு ‘சாதி இன்றி' என்று பொருள் இல்லை. அவர்ண சாதியினருக்கு ஷண்மத (ஆகம)க் கடவுள் கோயில்களில் நுழைவு உரிமை மறுக்கப் பட்டிருந்த காலகட்டத்தில், அவர்ண சாதியினருக்கும் பேதமின்றி உரிமை என்ற உயரிய நோக்கம், சமூக நோக்கம் குருவின் நோக்கமாக அறிவிக்கப்படுகிறது. அது ஒரு முதல்படி, முதல் அடி மட்டுமே.

அதற்குப் பிறகு 28 ஆண்டுகளில் அவரது ஆன்மீக - சமூகப் பயணம் மேலும் உயர்வான லட்சியங்களை நோக்கி பயணித்தது. சமூகக் கொடுமைகள் என்னும் நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி என்பதாக சாதி பேதங்களை மறுத்தவர். சாதி என்னும் சமூக நோய் முதல் நாடியை மறுக்கும் அடுத்த கட்டமாக 1916ஆம் ஆண்டு அறிக்கையைக் காண வேண்டும்.

(தொடரும்)

நன்றி: விடுதலை

Friday, 26 August 2016

கொடூர நோய்களை பரப்பும் மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழம் ஓர் அதிர்ச்சி தகவல்!

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும். இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலைகழ கங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூரு வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.
முன்பெல்லாம் மருத்துவர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு மிகவும் நல்லது என்பார்கள்.
ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைப்பழத்தை சாப் பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
இந்த மஞ்சள் வாழைப் பழம் பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும்,
நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும்; காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்  தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன் என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.
இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப் பழங்கள்தான். இயற்கையான வாழைப்பழம் பழுத்தால், இரண்டொரு நாளில் அழுகி விடும்.
இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைப்பழம், தேன்கதளி, நாட்டுப் பழம், நாட்டுச் சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மண மாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்தப் பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன் படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.
பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளைப் பயன் படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.
பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்குப் பதிலாக பூச்சிகளைக் கொல்லும் விஷச் சத்தை வாழை மரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
இதைத்தான் நாம் பி.டி. வாழை என்று அழைக்கிறோம்.
கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் விற்கப்படுகிறது.
இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ, விற்கவோ அனுமதிக்கப்படவில்லை
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.
இங்குதான் முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து, பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
நோய்களை பரப்பும்
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன் பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரி டவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூரு வாழைப் பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.
முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.
மக்களுக்கு,  இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவுபடுத்தப் பட்டது.
மாதக்கணக்கில் வைத்திருந்து விற் றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணு மாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப் பட்டாலும், இதற்குபோதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது. இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.
எனவே, சென்னையில் அறிவிக்கப் படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப் பழங்களை மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.
இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்க வில்லை.
பி.டி. ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷ மாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனி யாகும்.
மரபணு மாற்று காய்கறி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண் டாகும்.
இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலைகழ கங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூரு வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
பெங்களூரு வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழை யடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கி லிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.
ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒருமுறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற் கையாக மலடாக்கப்பட்டதாகும். எனவே, விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.
திசு வளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.
இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையைத் தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.
நன்றி: விடுதலை ஞாயிறுமலர் 27/08/16

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்தது

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்தது
- அய்ராவதம் மகாதேவன்
சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்தது என்று கல் வெட்டு ஆய்வாளரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் கூறினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தில் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல் லியல் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற முனைவர்கள் எ.சுப்ப ராயலு, செ.ராசு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்ச தாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்து கிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக் கிறது.
இதற்கு இணையான வார்த் தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும் போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்க் கும்போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்ததால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழியில் காணப்படு கின்றன என்பது என் கருத்து.
பாண்டியர்களின் மூதாதையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடு பட்டிருக்கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.
வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியி ருக்கலாம். இந்திய ஆரியப் பண் பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்துவெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கடவுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
எனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டைவிட காலத் தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடுகளுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிகமாக இருப் பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது என்பது எனது முடிவு என்றார் அய் ராவதம் மகாதேவன்.
(தினமணி, 29.1.2015)

Wednesday, 10 August 2016

சமூகநீதிக் களத்தின் சரித்திர நாயகர்கள்



திராவிடர் இயக்கமான - தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் “நீதிக்கட்சி” ((Justice Party) என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட அக்கட்சி அந்நாளில் நடத்திய ஜஸ்டிஸ் ஏட்டினையும், அதன் லட்சியமான சமூக நீதியையுமே முன்னிலைப்படுத்திடும் பெயர் கொண்டது.  அந்த  அமைப் பின் முழு வரலாற்றையும், அதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தமது அறிவு, உழைப்பு, அனுபவம், செல்வம் எல்லாவற்றையும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் எழுச்சிக் கும், வளர்ச்சிக்கும், கொடுத்த உத்தமத் தலைவர்கள் வாழ்வையும், வரலாற்றையும், அவர்கள் போராடி நமக்குப் பெற்றுத் தந்த உரிமைகளையும் 100 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில், நமது இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து உணர்வு கொள்ள வேண்டும்.
வேர்களின் வரலாறு, விழுதுகள் அறிய வேண்டும்
அந்த அரும் உழவர்கள் இந்த மண்ணை சமூகநீதிக்காக பக்குவப்படுத்திட, பெரும்பான்மையான மக்களுக்கு, வெகு சிறுபான்மையோர் மனுஸ்மிருதி, வேதங்கள் என்பவை களை மூளைக்குச் சாயமாக ஏற்றியதனால் ஏற்பட்ட தற்குறித்தனம், கல்வி உரிமை மறுப்பு - அறியாமை - வறுமை - இவைகளிலிருந்து பெரும்பான்மையினரான நம் மக்க ளைக் காப்பாற்றிட பிறந்ததே பார்ப்பனரல்லாதார் கட்சியான நீதிக்கட்சி. அதன் முன் னோடிகள் தனித்தனியே தம் முயற்சிகளை மேற்கொண்டனர். 1912 முதலே, டாக்டர் சி.நடேசன் அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க போராடிய பல்வேறு சாதனைகளும், 1916ல் சர்.பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் அவரோடு இணைந்த பல பார்ப்ப னரல்லாத தலைவர்களும் ஆற்றிய   அருந்தொண்டு களும், வரலாற்று பாடங்களாக்கி வழி வழியாக அறிந்து கொள்ள ஏனோ நாம் தவறிவிட்டோம்.
1967இல் அறிஞர் அண்ணாவைப் பார்த்து,
செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர்:
1957இல் தேர்தலில் போட்டியிட்டு 1967இல் - பத்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த பெருமை உங்கள் கட்சியின் (திமுகவின்) தனிப்பெரும் சாதனை அல்லவா? என்று அண்ணாவிடம் கேட்க, அறிஞர் அண்ணா மிகுந்த பெருமிதத்துடனும் அதே நேரத்தில் தன்னடக்கத்துடனும் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“எங்களுடைய வெற்றி ஏதோ 10 ஆண்டுகளில் கிடைத்த வெற்றி அல்ல; எங்கள் பாட்டன் - நீதிக்கட்சி இட்ட அஸ்திவாரத்தின் மீது ஏற்பட்ட வெற்றி. நீதிக்கட்சி அப்போது தோல்வி அடைந்த பின், காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி அய்யர் ‘நீதிக்கட்சியை 500 அடி ஆழக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம்’ என்று கூறியது உண்மை அல்ல; இதோ நாங்கள் அதன் தொடர்ச்சியாகவே இந்த வெற்றிக் கனியைப் பறித்துள்ளோம்” என்றார்.
நீதிக்கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அக்கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்கள் “அதென்ன அல்லாதார்?” 100க்கு 3 பேர்களாக உள்ளவர்களை வைத்து எஞ்சிய 97 பேர்களை அல்லா தார்கள் என்று  அடையாளப்படுத்திக் கொள்ளுதல், மிகவும் இழிவு - கேவலம் அல்லவா? நாம் 97 சதவிகிதத்தினர்  திராவிடர்கள் என்று வரலாற்றுப் பெருமை தரும் பெய ரையே வைத்துக் கொள்ளலாமே” என்று கூறிய பின்னர் திராவிடர் என்ற வரலாற்று பெருமை தரும் அடையாளமும், திராவிடரின்  மீது  ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆரியர்கள் என்ற உணர்வும் பரவ ஆரம்பித்தது.
திராவிடர் இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டடம் எழுப்பி, ஆட்சிக் கட்டிலும் அமைத்து ஒரு மாபெரும் அரசியல், சமுதாய (கல்வி, உத்தியோக) எழுச்சியை - ஏற்படுத்திய கர்த்தாக்களை நாம் மறக்கலாமா? வரலாறு நம்மை மன்னிக்குமா? என்ற உணர்வோடு அந்தத் தலை வர்களைப் பற்றி அறிந்து கொள்ள 50 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி எடுத்த திராவிடர் இயக்க எழுத் தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர், போற்றுதலுக்கு உரியவர், தலை சிறந்த திராவிடர் இயக்க எழுத் தாளர், அதிக விளம்பரம் பெறாத - விரும்பாத ஒரு பேனா மன்னர் தோழர் கோ.குமாரசாமி  என்ற மயிலாடுதுறைக்காரர்.  இவர் மத்திய அரசின்
இரயில்வே துறையில் பணியாற்றியதால் தான்  ‘திராவிடப்பித்தன்’ என்ற பெயரில் எழுதியவர். தோழர் என்.வி.நடராசன் அந்நாளில் நடத்திய திராவிடன் வார ஏட்டில் வெளியிடச் செய்தார்.
தோழர் என்.வி.நடராசன் அவர்கள் நடத்திய வாரப் பத்திரிகை - நீதிக்கட்சியின் - துவக்கத்தில் வெளிவந்த தமிழ்நாளேடான ‘திராவிடன்’ ஏட்டினை நினைவுபடுத்தவும், இன உணர்வூட்டும் வகையிலும் அப்பெயரில் அவரால் நடத்தப்பட்டது. திராவிடன் வார ஏட்டின் மலரில் மாணவ நிலையிலே கட்டுரை எழுதிடும் வாய்ப்பை தோழர் என்.வி.என். அவர்கள் என்னை போன்ற மாணவ, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தந்துள்ளார்.
அப்படி அதில் எழுதிய வரலாறும், பிறகு தனியே  அவை நூல்களாக வரவேண்டும், திராவிடர் இயக்க முன்னோடி களின் வரலாறு இளைய தலைமுறையைச் சேரவேண்டும் என்ற சிறந்த நோக்கத்திலும் பல்வேறு நூலகர்கள், பழகிய அறிஞர்கள், நண்பர்களை எல்லாம் சந்தித்துத் தேனீ, தேனை பல பூக்களிலிருந்து திரட்டி தேன்கூடு கட்டிட உதவுவதுபோல அரும்பணியாற்றிவர் தோழர் கோ.குமாரசாமி. (1985 மயிலாடு துறையில் 22, செங்கமேட்டுத் தெருவில் குடியிருந்தார் என்பதை மட்டுமே அறிய முடிகிறது நம்மால்). அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து அவர் எழுதிய நூல். 1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆன நிலையில் அவருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட “இராவ் சாகிப்” நல். முருகேச முதலியார் (இவர் ஓய்வு பெற்ற அதிகாரி மற்றும் நீதிக்கட்சி பிரமுகர்) அவர்களது முயற்சியால் 1984இல் டாக்டர் சி.நடேசனார் பற்றிய முழுதகவல்களைக் கொண்ட களஞ்சியமாக அவரது நூற்றாண்டு வெளியீடாக - தோழர் குமாரசாமி எழுதிய நூல் வெளிவந்தது!
இது போலவே சர்பிட்டி தியாகராயர் பற்றியும், டாக்டர் டி.எம்.நாயர் பற்றியும் தோழர் குமாரசாமி அவர்கள் பல்வேறு நூல்களிலிருந்து பல அரிய தகவல்களைத் திரட்டி தோழர் குமாரசாமி அவர்கள் “திராவிடப் பெருந்தகை தியாகராயர்” என்ற தலைப்பில் 1985இல் எழுதி அதை திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் லிமிடெட், வெளியிட்டுள்ளது (அந்நூல் மீள் பதிப்பாக நம்மால் விரைவில் வெளிக் கொணரப்பட விருக்கிறது)
இப்படி நமது தலைவர்களின் வரலாற்றை புதைபொருள் ஆராய்ச்சிபோல் தேடித்தேடி கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. சிந்துவெளி நாகரிகத்தினை - திராவிடர் நாகரிகத்தை எப்படி சர்ஜான்மார்ஷல் (பாதர்) ஈராஸ் பாதிரியார் போன்றவர்கள் தொல்பொருள் ஆய்வு மூலம் தந்தார்களோ, அது போல நம் குமாரசாமி நமக்கு தந்துள்ள அரிய கருவூலம் ஆகும் இது. அதிலிருந்த பலவற்றையும், வேறு பல நூல்களிலிருந்து திரட்டியவைகளையும், இன்றைய தலைமுறையினர் வர லாற்றை மறந்தவர்களாகக் கூடாது என்ற நோக்கத்துடன் தொடர் கட்டுரைகளாக எழுதிட முனைந்துள்ளோம்.
வாசகர்கள் வரவேற்றுப் பயன் அடைவார்கள் என்று நம்புகிறோம்.
அடுத்த இதழ் முதல் திராவிடர் கல்வித் தந்தை டாக்டர் சி.நடேசனாரின் தியாக வாழ்வின் பல்வேறு படலங்கள் தொடரும்.
தொடரும்.....
நன்றி: விடுதலை